வன்னியில் வேட்புமனு நிராகரிப்பு; தீர்ப்பினை அறிவித்த உயர் நீதிமன்றம்!

25 0

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (23) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு முறைப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வன்னி தேர்தல் அதிகாரியினால் முன்னர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசா மற்றும் இருவரினால் கடந்த வாரம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை நிராகரித்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியின் முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும், அந்த முடிவை செல்லாது என்று உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், உண்மைகளை கருத்திற்கொண்ட உயர் நீதிமன்றம், பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை நிராகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என இன்று தீர்ப்பளித்தது.

அதேநேரம், அவரது வேட்பு மனுவை அங்கீகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.