அறுகம்பை பிரதேசத்தில் பிரபல்லியமான சுற்றுலா இடமொன்றை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள நம்பகரமான தகவல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஸாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக காரியாலயத்துக்கு அண்மையில் கிடைக்கப்பெற்றுள்ள நம்பகரமான தகவலுக்கமைய, அறுகம்பை பிரதேசத்தில் பிரபல்லியமான சுற்றுலா இடமொன்றை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை உடனடியாக விசாரணை செய்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நம்பகரமான இடமொன்றில் இருந்து வெளிப்படுத்தி இருக்கும் நிலைமை தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும்.
தேர்தல் காலத்தில் மற்றும் குறிப்பிடத்தக்கதளவில் சுற்றுலா பயணிகள் வருகை தரும் சந்தர்ப்பத்தில் எமது பிரஜைகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் என இரண்டு தரப்பினரையும் பாதுகாப்பதற்கு அனைத்து முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வது கட்டாயமாகும்.
எனவே இதுதொடர்பில் விரைவாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பூரண பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு செய்வதன் மூலம் தேர்தல் செயற்பாட்டின் நேர்மையை பாதுகாக்கவும் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்லவும் எங்களுக்கு முடியுமாகும்.
எனவே அவதானமாக இருக்குமாறும் ஏதாவது சந்தேகத்துக்குரிய செயற்பாட்டை அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அறிவிக்குமாறும் பொது மக்களை கேட்டுக்கொள்கிறேன்.
அதேநேரம் குறித்த நிறுவனத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஆலாேசனைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.