மாமல்லபுரத்தில் காவலாளி தாக்கப்பட்ட வழக்கு – கைதான 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

49 0

அக்டோபர் 20 ஆம் தேதி மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் நோ பார்க்கிங் வழியாக கார் ஒன்று செல்ல முயன்றது.அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஏழுமலை (வயது 45) என்பவர் காரை ஐந்துரத வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கூறினார்.

அதை மீறி காரில் வந்தவர்கள் காரை நோ பார்க்கிங்கில் நிறுத்த முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் ஏழுமலை அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது.உடனே காரில் இருந்து இறங்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர்  “ஏய் யாரை பார்த்து திட்டுகிறாய் ” என ஆவேசமடைந்து, நடுரோட்டிலேயே ஏழுமலையை சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களுடன் வந்த ஆண்களும் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கினர். இந்த கைகலப்பு சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பானது.

பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் 4 பேரையும் சமாதானம் செய்து காவலாளி ஏழுமலையை அவர்களின் பிடியிலிருந்து காப்பாற்றினர். பின்னர் 2 பெண்கள் உள்ளிட்ட 4 சுற்றுலா பயணிகளும் காரில் சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் முகத்தில் காயமடைந்த ஏழுமலை ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இச்சம்பவத்தை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

அந்த வீடியோ வைரலாகி வருகிறது. காவலாளி ஏழுமலைக்கு அங்குள்ள வியாபாரிகள் நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊதியம் என்ற தினக்கூலி அடிப்படையில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அவரை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐந்துரதம் வணிக வளாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.இதனையடுத்து காவலாளியை தாக்கியது தொடர்பாக முடிச்சூரை சேர்ந்த பிரபு இன்பதாஸ் (41), சண்முகப்பிரியா (38), கீர்த்தனா (29) உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், இன்று திருப்போரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற கா.வல் விதிக்கப்பட்டது. இதனையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்