மலேரியா இல்லாத தேசம்: எகிப்துக்கு உலக சுகாதார மையம் சான்று

18 0

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து சான்று அளித்துள்ளது உலக சுகாதார மையம். மலேரியா நோயை அழிக்க சுமார் நூறாண்டு கால முயற்சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

எகிப்தின் பழமையான நாகரிகத்தை போலவே மலேரியா நோய்க்கும் அங்கு வரலாறு உண்டு. ஆனால், இனி அந்நோய் அங்கு கடந்த கால வரலாறாக மட்டுமே இருக்கும். எதிர்காலத்தில் அது இருக்காது. மலேரியா இல்லாத தேசமாக எகிப்துக்கு வழங்கியுள்ள இந்த சான்றானது அந்நாட்டு மக்கள் மற்றும் அரசின் அர்ப்பணிப்புக்கு கிடைத்துள்ள சான்றாகும். இதிலிருந்து விடுவித்துக் கொள்ள அயராத உழைப்பு அடங்கியள்ளது என உலக சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

எகிப்துடன் சேர்த்து உலக அளவில் 44 நாடுகள் மலேரியா இல்லாத நாடுகளாக தற்போது உள்ளன. அனோபிலிஸ் கொசுக்களால் பரவும் மலேரியா பாதிப்பு சுமார் மூன்று ஆண்டு காலம் தடுக்கப்பட்டதை ஒரு தேசம் நிரூபிக்கின்ற போது உலக சுகாதார மையம் மலேரியா இல்லாத தேசம் என்ற சான்றினை வழங்குகிறது. இதோடு மீண்டும் மலேரியா பரவுவதை தடுப்பதற்கான திறனையும் நிரூபிக்க வேண்டும்.

உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் பேர் மலேரியா நோயால் உயிரிழக்கின்றனர். அவர்களில் 95 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள். கடந்த 2022-ல் சுமார் 249 மில்லியன் பேருக்கு உலக அளவில் மலேரியா நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சான்றை பெறுவது ஒரு பயணத்தின் முடிவு, மற்றொரு பயணத்தின் தொடக்கம் என எகிப்து சுகாதார துறை அமைச்சர் கலீல் தெரிவித்துள்ளார். கடந்த 1920-களில் எகிப்து நாட்டில் மலேரியாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. வீடுகளுக்கு அருகில் பயிர் சாகுபடி செய்யக்கூடாது என அப்போது மக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. கடந்த 2001-ல் மலேரியா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.