“அதிமுகவில் எரியும் தீயை பழனிசாமி முதலில் அணைக்கட்டும்” – முத்தரசன் கருத்து

17 0

“அதிமுகவில் எரிந்துகொண்டிருக்கும் தீயை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முதலில் அணைக்க வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு ஆசிரியர் பயிலரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் முன்னிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் நாராயணா கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து பயிலரங்கை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இரா.முத்தரசன் கூறியது: “1925-ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டு நூறாண்டுகள் ஆகும் நிலையில் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளோம்.

அதன் ஒருபகுதியாக திருச்சியில் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு குறித்து புத்தகம் வெளியிடப்பட உள்ளது. கட்சியின் வரலாறு குறித்து மூத்த தலைவர்கள் எடுத்துரைப்பார்கள். நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஆண்டு முழுவதும் கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

திமுக கூட்டணியை விட்டு கூட்டணிக் கட்சிகள் வெளியேறி விடுவார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியிருப்பது, அவரது ஆசை மற்றும் விருப்பம். அதிமுக எரிந்துகொண்டிருக்கிறது முதலில் அதனை அணைப்பதற்கு பழனிசாமி ஏற்பாடு செய்யட்டும். திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாகவும், ஒற்றுமையுடனும் இருக்கிறோம். இந்த அணி தொடரும். மேலும் பலப்படும்.

காவலர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள், தவறுசெய்யும் ஒன்றிரண்டு பேர்களை தண்டிக்கலாம். அதைத் தவிர்த்து, ஒட்டுமொத்த காவலர்களையும் அவதூறாக பேசுவது நாகரிகம் அல்ல. பல்வேறு நிகழ்வுகளில் காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். நடவடிக்கை எடுத்தால் இந்த அரசு அராஜக அரசு என்கிறார்கள். ஆனால், எல்லா பிரச்சினைகளிலும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் நிரந்தப்படுத்த வேண்டும், குறிப்பாக, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை அரசு பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும், மற்றவர்களுக்கு வழங்குவதுபோல இவர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன் என சீமான் கூறுகிறார். அவர் ஆட்சிக்கு வரும்போது பார்த்துக் கொள்ளலாம். அதற்கு முன்னதாக தற்போது தமிழ்தாயை மதிக்க வேண்டும். தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, வேண்டாமா? என்பதை சீமான் முதலில் கூற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.