இலங்கை துறைமுக அதிகாரசபையால் கொழும்பு தெற்கு துறைமுகக் கருத்திட்டத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு துறைமுக அதிகாரசபைக்கு முழுமையான உரித்துடன் கூடிய கொள்கலன் முனையமாக இயக்குவதற்கு கடந்த 2021 பெப்ரவரி முதலாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த சிவில் வேலைகளுக்கான ஒப்பந்தம் தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த கொள்கலன் முனையத்திற்குத் தேவையான பாரந்தூக்கிகளைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகையும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் தனியார் கொள்கலன் இயக்குபவர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு மூலோபாய அபிவிருத்திச் சட்டம் மற்றும் முதலீட்டு சபைச் சட்டத்தின் கீழ் காணப்படும் பல்வேறுபட்ட வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு கிழக்கு கொள்கலன் முனையக் கருத்திட்டத்தை ‘விசேட கருத்திட்டமாக’ நிதி விடயதான அமைச்சரால் வெளியிடுவதற்காக போக்குவரத்து, அதிவேக வீதி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.