தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 1.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது கடந்த செப்டெம்பர் மாதத்தில் -0.2 சதவீதமாகக் கணிசமான அளவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோன்று புள்ளிவிபரத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இக்கணிப்பீட்டின் பிரகாரம் ஓகஸ்ட் மாதம் 2.3 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம், செப்டெம்பரில் 0.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் சகல பொருட்களுக்குமான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 203.1 ஆகப் பதிவாயிருப்பதுடன், இதனைக் கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவான 204.1 எனும் விலைச்சுட்டெணுடன் ஒப்பிடுகையில் இது 1.0 புள்ளி வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
அத்தோடு தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம் கணிப்பிடப்படும் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் செப்டெம்பரில் -0.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த ஓகஸ்ட் மாதம் 2.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த ஆண்டுக்கு ஆண்டு உணவுப்பணவீக்கம் செப்டெம்பரில் 0.5 சதவீதமாகவும், ஓகஸ்ட்டில் 0.2 சதவீதமாகப் பதிவாகியிருந்த ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப்பணவீக்கம் செப்டெம்பரில் -0.7 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளன.