12 பாடசாலை போக்குவரத்து பஸ்கள், வேன்கள் சேவையில் இருந்து நீக்கம்

7 0

நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட 12 பஸ்கள் மற்றும் வேன்கள்  இன்று திங்கட்கிழமை (21) காலை சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்ட பிரதான வாகன பரிசோதகர் தமிந்த திஸாநாயக்க இந்த நடவடிக்கையை  எடுத்துள்ளார்.

மஸ்கெலியா, சாமிமலை, பொகவந்தலாவை, நோர்டன் பிரிட்ஜ், தலவாக்கலை, கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாளாந்தம் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுப்படும்  30 தனியார் பஸ்கள் மற்றும் வேன்களை  பரிசோதித்து  ஏதேனும் குறைபாடுகள்  உள்ளனவான என கண்டறியுமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகருக்கு பணிப்புரை விடுத்திருந்தனர்.

அதன்படி, கடந்த 14 நாட்களாக இப்பகுதிகளில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை  கடுமையாக பரிசோதித்த போது  அதில் 12 வாகனங்களில் குறைப்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டு, அவற்றின் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களில் பாடசாலைக்கு பயணம் செய்த மாணவர்களின் பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து நடடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.