யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!

12 0

யாழ் நகரத்தின் கிழக்குப் புறமாக நகரில் அமைந்துள்ள யாழ். போதனா வைத்தியசாலை யாழ் குடாநாட்டில் வாழ்கின்ற எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிற்கு மட்டுமன்றி அயல் மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களிற்கும் பிரதான வைத்தியசாலையாக உள்ளது. தினசரி ஆயிரம் பேர் வரையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதோடு, பல கட்டட வசதிகளுடன்,சத்திரசிகிச்சைப் பிரிவு, அவசர சத்திரசிகிச்சைப் பிரிவு எனப் பல பிரிவுகளுடனும் 1970களிலிருந்து இயங்கி வருகிறது.

1987ஆம் ஆண்டு அக்டோபர்  பத்தாம் நாள் இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் தொடங்கியதிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற போரின்மூலம் யாழ்நகரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்திய இராணுவத்தினர் ஈடுபட்டார்கள்.

யாழ்ப்பாணக் கோட்டையில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தினர் யாழ் நகரப்பகுதி மீது பெருமளவு எறிகணைத் தாக்குதல், விமானத் தாக்குதலை மேற்கொண்டிருந்தபோதும் யாழ். வைத்தியசாலையில் வைத்தியர்கள்,ஊழியர்கள், தாதிமார் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கான வைத்திய சேவையை வழங்கிப் பல உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள்.

1987 அக்டோபர் இருபத்தோராம் திகதி இந்தியப்படையினர் எறிகணை வீச்சு,விமானத் தாக்குதல்களை நடத்தியவாறு யாழ். நகரை நோக்கி முன்னேறினார்கள். யாழ். வைத்தியசாலையில் பணிகளில் ஈடுபட்ட வைத்தியர்கள்,ஊழியர்கள்,சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் போன்றோர் பாதுகாப்பிற்காக, வைத்தியசாலை எக்ஸ்றே பிரிவு அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் பாதுகாப்பு தேடினார்கள்.

பிற்பகல் 3.00 மணியளவில் யாழ் நகரப் பகுதிக்குள் இந்திய இராணுவம் உள்நுழைந்தது. பின்னர் 4.30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவம் அலுவலகப் பகுதியில் வைத்தியசாலைச் சீருடையுடன் இருந்த ஊழியர்கள், நோயாளர் வண்டில், கட்டில், பாய், வாங்குகளிற் படுத்திருந்த நோயாளர்கள் என எல்லோரையும் சுட்டுப்படுகொலை செய்தது.

கடமையில் இருந்த 21 ஊழியர்களும் 46 நோயாளர்களும் பார்வையாளர்களும் இப்படுகொலையில் கொல்லப்பட்டார்கள். எனினும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் மொத்தத்தில் 135 மக்கள் கொல்லப்பட்டதாகச் சொன்னார்கள். அந்நேரத்தில் ஏனையவர்கள் கதைத்தவற்றை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் இத்தொகைசொல்லப்பட்டிருக்கவேண்டும்.

கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மூன்று நாட்களாக வைத்தியசாலையிலேயே இருந்தன. அதன் பின்னரேயே வைத்தியசாலை குப்பைத்தொட்டியில் போட்டு எரிக்கப்பட்டன. கொல்லப்பட்ட 21 வைத்தியர்கள், தாதியர்கள்,ஊழியர்களையும், 46 நோயாளர்களையும் நினைவுகூர்ந்து வருடந்தோறும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.