திராவிட மாடல் அரசு மேற்கொள்ளும் முன்னெடுப்புகள் சிறப்புமிக்கது- மு.க.ஸ்டாலின்

35 0

மாணவர்களும், ஆசிரியர்களும் கல்வி வேட்கை கொள்ள வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்வது போன்ற திராவிட மாடல் அரசு மேற்கொள்ளும் முன்னெடுப்புகள் சிறப்புமிக்கது என கனவு ஆசிரியர்களின் கல்விச்சுற்றுலா குறித்து மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2023-24-ம் கல்வி ஆண்டில்  “கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்லப்பட உள்ளனர்.கல்விச்சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாசாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா செல்லும் கனவு ஆசிரியர்கள் திருச்சியில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துகளை பெற்றனர்.இந்த சம்பவம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவிற்கு மறுபதிவிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா? அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களும் – ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் நமது திராவிட மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்பு.இந்த பதிவு குறித்து நான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பேசியபோது, இதுவரையில் எத்தனை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் என கேட்டேன்.

ஆறு நாடுகளுக்கு 236 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும் – இந்த பயணத்துடன் 92 ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினைப் பெற்றதாகவும் கூறினார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது.இந்த முன்னெடுப்புகளைச் செய்துவரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், அவருக்கு துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.