சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை

14 0

 சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை. ஜனாதிபதி உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியினர் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்றுவதாக  தெரிவித்துவரும் நிலையில், நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை அவ்வாறே முன்னெடுத்து செல்வதாக அரசாங்கம் சர்வதேசத்துக்கு தெரிவித்துள்ளது என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி கடன் உதவிகளை பெற்றுக்கொள்ளவும் எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த மாதம் செப்டெம்பர் மாதத்துடன்  இரு தரப்பு இணக்கப்பாடுகளுடன் பூரணப்படுத்தப்பட்டன.

என்றாலும் எமக்கு தனிப்பட்ட ரீதியில் கடன் வழங்கி இருந்த எமில்டன் ரிசவ் வங்கி, இலங்கைகக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. குறித்த வழக்கில், பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. என்றாலும் எமது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, கடனை மீள செலுத்த கால அவகாசம் கோரி, எமது நீதிபதிகள் அமெரிக்க நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தது. அதன் பிரகாரம் எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குறித்த வழக்கு விசாரணை 6மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சில தவணைகள் எமக்கு வழங்கப்பட்டன.

இந்த நிலையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளுக்கு எதிரான கருத்துடையது. அதனால் எமக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தொடுத்திருந்த, எமில்டன் ரிசவ் வங்கி, கடந்த முதலாம் திகதி மீண்டும் வழக்கு தொடுத்திருந்தது.

அதற்கு இலங்கை அரசாங்கம் அதற்கு பதிலளி்க்கும் வகையில் கடந்த 4ஆம் திகதி தனது நிலைப்பாட்டை அறிவித்து அமெரிக்க நீதிமன்றத்துக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்கிறது. அதில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தையும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையையும் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் முன்னெடுத்துச்செல்வதாக தெரிவித்திருக்கிறது.

ஆனால் எமக்குள்ள பிரச்சினை என்னவென்றால், நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை மாற்றியமைக்க பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்கள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் தெரிவித்து வருகிறது. ஆனால் நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இணக்கப்பாடு ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது. அவ்வாறு எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதாக அரசாங்கம் சர்வதேசத்துக்கும் அமெரிக்க நீதிமன்றத்துக்கும் அறிவித்திருக்கிறது.

வ்வாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மக்களிடம் ஒரு கருத்தை தெரிவித்துக்கொண்டு, ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டத்தை அவ்வாறே முன்னெடுப்பதாக சர்வதேசத்திடம் தெரிவித்து வருகிறது. அதனால் நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை. அதேநேரம் புதிய ஜனாதிபதி ஒருவர் பதிவி ஏற்றால் ஆரம்பமாக அவர் தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை பாராளுமன்றத்திலோ அல்லது மக்கள் முன்னிலையிலோ முன்வைக்க வேண்டும். ஆனால் அநுரகுமார திஸாநாயக்க இதுவரை அவ்வாறு எதனையும் தெரிவிப்பதை காணவில்லை என்றார்.