திருடர்களை பிடிக்கும் போது எவரும் சிணுங்காதீர்கள்

26 0

கடந்த காலங்களில் 400க்கு மேற்பட்ட கோப்புகள் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் முடங்கிப்போயுள்ளன. அனைத்துக் கோப்புக்களையும் மீண்டும் திறந்து படிப்படியாக வழக்கு தொடர அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு  சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறோம்.திருடர்களை பிடிக்கும் போது எவரும் சிணுங்காதீர்கள்  என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

பொதுத்தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பரப்புரை கூட்டம் தங்காலையில் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு உரையாற்றினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஒரு சிலர் இப்பொழுது கேட்கிறார்கள் திருடர்களை பிடித்துவிட்டீர்களா என்று. ஆனால் நான் ஒன்றைக் கூறுகிறேன் பிடிக்கும்போது சிணுங்க வேண்டாம்.400 மேற்பட்ட கோப்புகள் இருக்கின்றன.

அவை மூடப்பட்டு இருக்கின்றன. நாங்கள் பரிசீலித்துப் பார்த்தோம்.ஒருசில கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் முடங்கிபோயுள்ளன.

மேலும் சில கோப்புகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இறுகிப்போயுள்ளன.இன்னும் சில கோப்புகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் குவிந்து இருக்கின்றன.

அனைத்துக் கோப்புக்களையும் மீண்டும் திறந்து படிப்படியாக வழக்கு தொடர அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறோம்.

நாங்கள் காட்சிக்காக வேலை செய்பவர்கள் அல்ல.2015 இல் முழுமையாகவே மோசடிப்பேர்வழிகளுக்கும் ஊழல்பேர்வழிகளுக்கும் எதிராக காட்சிக்கான வேலைத்திட்டமொன்று அமுலாக்கப்பட்டது.

இலஞ்ச ஆணைக்குழுவுக்கு கோப்புக்களை எடுத்துச் செல்வார்கள். வெளியில் வந்து ஊடங்களுக்கு கருத்து சொல்லுவார்கள்.

தேசிய மக்கள் சக்தி அப்படியல்ல.மிகவும் திட்டமிட்ட வகையில் எல்லா தரவுகளையும் சேகரித்து முறைப்படி நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கத்தக்க வகையில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அவசியமான அறிவுறுத்தல்களை நாங்கள் வழங்கியிருக்கிறோம். எவருமே பதற்றமடைய வேண்டாம்.

இந்த நாட்டு மக்களிடம் அதுபற்றிய ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. அதோ அந்த மோசடியாளர்களுக்கும் ஊழவாதிகளுக்கும் தண்டனை வழங்குகின்ற எதிர்பார்ப்பினை நிறைவேற்றுகின்ற அரசாங்கம்தான் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். நாங்கள் அதனை சாதிப்போம்.அத்தோடு நின்றுவிட மாட்டோம் என்றார்.