பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகே வீதிச் சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்ட நபரொருவர், கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை (19) களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 23 வயதுடைய நெல்லிகஹவத்த, பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அவரிடமிருந்து 200 மில்லிகிராம் 08 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின்போது,
இவர் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி எனவும், நச்சு போதை மருந்துகளுக்கு அதிக அடிமையாக இருக்கும் ஒருவர் எனவும், அளுத்கடை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 05 குற்ற வழக்குகளுக்கு திறந்த பிடியாணை மற்றும் கைரேகைகள் மூலம் அவர் 14 குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை வீடுகள், கடைகள் மற்றும் பாடசாலைகளில் திருடப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து விஷ மருந்துகளை கொள்வனவு செய்து பணம் சம்பாதித்தமையும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் அளுத்கடையில் உள்ள நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், சந்தேக நபரின் வாக்குமூலத்தின் பிரகாரம், திருடப்பட்ட சொத்து மற்றுமொரு சந்தேக நபர் ஊடாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அந்த நபர் 42 வயதுடைய வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபர்களின் திருடப்பட்ட சில சொத்துக்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.