அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்காமல் இருப்பது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் – சுசில் பிரேமஜயந்த

15 0

அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்காமல் இருப்பது பாரிய பிரச்சினையாகும். ஏனெனில், அடுத்த வருடத்துக்கான வருமான இலக்குகளை அடிப்படையாகக் கொண்டே செலவுகளை திட்டமிட முடியும். இடைக்கால கணக்கு வாக்கெடுப்பை அனுமதித்துக்கொள்வதன் மூலம் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாது. வருமான வழிகளையும் திட்டமிட முடியாது என முன்னாள் அமைச்சரும் புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி 19 மாவட்டங்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதுடன்  3 மாவட்டங்களில் எமது பங்காளி கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு 23 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 55 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன. அடுத்தபடியாக சஜித் பிரேமதாசவுக்கு 44 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன. ஆனால், யாருக்கும் 50 வீதத்துக்கு அதிக வாக்கு கிடைக்கவில்லை. அதனால் 57 வீத வாக்குகள் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராகவே அளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் கட்சிகளுக்கு கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் மூலம் எந்த கட்சிக்கும் பாராளுமன்றத்தில் 113 ஆசனங்கள் கிடைப்பதில்லை. அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப்பெற்றது போன்று பாராளுமன்ற தேர்தலில் அந்த வாக்குகள் அவ்வாறே கிடைக்கும் என தெரிவிக்க முடியாது.

கட்சிகளின் அடிப்படையில் வாக்குகள் பிரிந்து செல்லும். அதனால் தேசிய ஐக்கிய முன்னணிக்கு நிறைவேற்று அதிகாரத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு நாட்டை ஆட்சி செய்ய முடியாது. பாராளுமன்ற அதிகாரமும் தேவையாகும். பாராளுமன்ற அதிகாரத்தை எவ்வாறான முறையில் மக்கள் வழங்குவார்கள் என்பது அவர்களின் நடவடிக்கைகளிலேயே தங்கி இருக்கிறது.

தேர்தல் பிரசார மேடைகளில் அவர்கள் தெரிவித்த விடயங்களுக்கு மாற்றமான நடவடிக்கையே தற்போது இடம்பெறுகிறது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு, அரச ஊழியர்களின் சம்பள உயர்வு, பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற விடயங்கள் அவர்கள் தெரிவித்துவந்த வாக்குறுதிக்கு மாற்றமாகவே இருக்கின்றன.

அதேபோன்று இந்த அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்காமல் இடைக்கான கணக்கு வாக்கெடுப்பொன்றை அனுமதித்துக்கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறது.

பாராளுமன்ற தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெற்று 21ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக தெரிவித்துள்ள நிலையில், டிசம்பர் முதல் வாரத்துக்குள் அமைச்சரவையை அமைத்து, வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு காலம் போதுமானதாகும்.

இடைக்கால கணக்கு வாக்கெடுப்பை அனுமதித்துக்கொள்வதன் மூலம் அரசாங்கத்தின் மீண்டெழும் செலவுகளுக்கு மாத்திரமே நிதி ஒதுக்க முடியும். அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாது. வரி செலுத்துபவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

அதனால் அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்காமல் இருப்பது பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

அடுத்த வருடத்துக்கான வருமான இலக்குகளை அடிப்படையாகக் கொண்டே செலவுகள் திட்டமிட முடியும். அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளுக்கமைய எமது மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த விடயங்கள் அனைத்தையும் வரவு – செலவு திட்டத்தின் மூலமே திட்டமிட முடியும் என்றார்.