கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கம் – ஞானப்பிரகாசம் சுலக்சன்

14 0

தமிழர்களே தமிழ் கடலினை ஆழ வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அதற்காக கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும் என ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தில் சுமார் 46 ஆயிரம் கடற்தொழிலாளர்களின் குடும்பங்கள் காணப்படுகின்றன. இன்றைய காலத்தில் அவர்கள் வாழ்வாதாரங்களையும் இழந்து,  அவர்களுக்கு இருக்கும் கடல் உரிமையையும் இழந்து நிர்கதியாக நிற்கின்றார்கள். அவர்களுக்கு தீர்வினை நாம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை எடுப்போம்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சுமார் 21ஆயிரத்து 800 கடற்தொழிலாளர்களின் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரங்கள் உயர்த்தப்பட வேண்டும்.

இந்திய இழுவை படகுகள் வடக்கு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்குவதுடன், கடல் வளங்களையும் அழித்துச் செல்கின்றனர். அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்போம்.

சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து அவற்றை முற்றாக தடை செய்வோம்.

அனுமதியின்றி வடக்கு கடற்பரப்பில் தொழில் செய்யும் வெளி மாவட்ட மீனவர்களை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கைளை எடுப்போம்.

கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.  அபிவிருத்தி எனும் பெயரில் சிறு தொழில் செய்யும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அவர்களுக்கான உதவிகளை வழங்குவோம்.

கடலட்டை பண்ணைகள், இறால் பண்ணைகள் என்பவற்றை மீளாய்வு செய்து முறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

கரையோரங்களில் இராணுவம் மற்றும் கடற்படையை வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கைகளை எடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்த கடற்தொழிலாளர்களை மீள் குடியேற்றி அவர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவது, இறங்குதுறைகளை புனரமைத்து அபிவிருத்தி செய்வது, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதற்கான பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம்.

தமிழர்களே தமிழ்க் கடலினை ஆழ வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அதற்காக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும் என்றுள்ளது.