பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.இதற்கிடையே ஹமாஸ் தலைவர் யாஹியாசின் வாரை இஸ்ரேல் ராணுவம் கொன்றது. சில மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யாஹியா சின்வாரும் கொல்லப்பட்டது ஹமாஸ் அமைப்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. யாஹியா சின்வார் உயிரிழந்ததை ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்தது.
இதையடுத்து இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி உள்ளன.இந்த நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் வெளியேறாதவரை பிணைக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஹமாஸ் துணைத்தலைவர் கலீல் அல் ஹய்யா கூறும்போது, காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். இஸ்ரேல் படைகள் முற்றிலும் திரும்பப்பெற வேண்டும்.
சிறையில் உள்ள எங்கள் அமைப்பினர் விடுதலை செய்யப்பட வேண்டும்.காசாவில் எங்கள் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை எந்த பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றார்.இதற்கிடையே ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவராக காசாவுக்கு வெளியே வெளிநாட்டில் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்க அந்த அமைப்பு பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில் வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலின் தாக்குதலில் 33 பேர் பலியானார்கள். 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.