பொது ஒழுங்கைப் பேணுவதற்கு ஆயுதப்படையினரை அழைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறதா?

23 0

நாட்டில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினருக்கு அழைப்புவிடுக்கும் வகையில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அளவுகோல்களுக்குப் புறம்பாகப் பிறப்பிக்கப்படக்கூடிய இத்தகைய கட்டளைகளால் மனித உரிமைகள் பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கம் ஏற்படக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் 2024 செப்டெம்பர் 26ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட 2403/47ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக (முன்னைய அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட இக்கட்டளை மாதாந்தம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது) செப்டெம்பர் 24ஆம் திகதி முதல் ஒரு மாதகாலத்துக்கு இலங்கையின் ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமது கரிசனையை வெளிப்படுத்தி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரீ.பி.தெஹிதெனியவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்திலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசாங்கமொன்றினால் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்போது, அவை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கும், தராதரங்களுக்கும் ஏற்றவாறு அமைவதை உறுதிப்படுத்தும் வகையிலான பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்கு 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 10 (ஈ) பிரிவின் பிரகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 (1) பிரிவு மீது கவனம் செலுத்துமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அப்பிரிவின்படி ஏதேனுமொரு பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டாலோ அல்லது ஏற்படவிருக்கும் சந்தர்ப்பங்களிலோ, அதனைக் கையாள்வதற்கு அப்பிரதேசத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பொலிஸார் போதுமானளவில் இல்லை என ஜனாதிபதி கருதும் பட்சத்தில், அந்தப் பிரதேசத்தின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக வர்த்தமானி ஊடாக வெளியிடப்படும் கட்டளையொன்றின் மூலம் எந்தவொரு ஆயுதப்படை அங்கத்தவரையும் அழைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மிக முக்கியமாக ‘பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலைமைகள் ஏற்படும்போது’ மற்றும் ‘அத்தகைய சூழ்நிலையை சமாளிப்பதற்குரிய பொலிஸ் அதிகாரிகள் போதுமானளவில் இல்லாதபோது’ ஆகிய வசனங்கள் தொடர்பில் மேற்கூறப்பட்ட பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள கடுமையான அளவுகோல்கள் குறித்து நீங்கள் விசேட கவனம் செலுத்தவேண்டும். அதாவது பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய நிலைகள் ஏற்பட்டிருப்பதாகவும், நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு பொலிஸாருக்கு ஆற்றல் இல்லை எனவும் ஜனாதிபதி கருதும் பட்சத்தில் மாத்திரமே அப்பணியில் ஆயுதப்படைகளை ஈடுபடுத்தவேண்டும்.

கடந்த சில வருடங்களாக இவ்வாறான கட்டளையைப் பிறப்பித்தல் சாதாரண விடயமாகக் காணப்படுகின்ற போதிலும், மேற்குறிப்பிடப்பட்டவாறான சந்தர்ப்பங்களில் மாத்திரமே இக்கட்டளையைப் பிறப்பிக்கவேண்டும் என நாம் கருதுகின்றோம். அதேபோன்று சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் நடைமுறைப்படுத்தப்படும் முறையைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் குழு, பொலிஸாரின் கடமைகளைச் செய்வதற்கு ஆயுதப்படைகள் ஈடுபடுத்தப்படுவது குறித்து அதன் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. அதன்மூலம் பொலிஸாரின் பணிகளில் ஆயுதப்படையினரை ஈடுபடுத்துவதன் ஊடாக நாட்டின் மனித உரிமைகள் பாதுகாப்பின் மீது ஏற்படக்கூடிய தாக்கம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே இதுபோன்ற கட்டளைகளைப் பிறப்பிப்பதை மீள்பரிசீலனை செய்யுமாறும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார் மீதான நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் உங்களிடம் வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை தற்போது பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் பின்னணியில், அரசியலமைப்பின் 104 (டி) பிரிவின் ஊடாக தமக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் பிரகாரம், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சம்பவத்தையும் தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு ஆயுதப்படைகளை ஈடுபடுத்துதல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உங்களுக்கு எவ்வித பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின் கீழ் மேலே சுட்டிக்காட்டப்பட்டவாறான கட்டளையொன்றைப் பிறப்பிக்கமுடியுமா என்பது பற்றியும் நீங்கள் ஆராயவேண்டும்.

மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 21 (4)ஆவது பிரிவானது, மேற்கூறப்பட்டவாறு பிறப்பிக்கப்பட்ட கட்டளையொன்றை பாராளுமன்றத் தீர்மானத்தின் மூலம் திருத்தியமைக்கவோ அல்லது இரத்துச்செய்யவோ முடியும் எனக் கூறுகிறது. இருப்பினும் தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் இவ்வாறான கட்டளையைப் பிறப்பிப்பது ஏற்புடையதா என்பது குறித்தும் நீங்கள் அவதானம் செலுத்தவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.