புலம்பெயர் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு இயலுமான சகல நடவடிக்கைகளையும் எடுப்போம் – கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிப்பு!

31 0

ஏனைய பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப்போன்று கனேடியவாழ் தமிழர்களும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதற்கு இயலுமான சகல நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுக்கவேண்டும் எனவும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

கனடாவின் தேர்தல் முறைமைகள் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மீதான வெளியகத் தலையீடுகள் தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி நடத்தப்பட்ட பகிரங்க நேர்காணலில் கலந்துகொண்டு பதிலளித்த கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழர் உரிமைகள் குழுவின் உறுப்பினர் கற்பனா நாகேந்திராவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கனடாவின் ப்ரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி ப்ரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுனுக்கு டொரன்டோவில் உள்ள இலங்கையின் கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோவினால் கடந்த மேமாதம் எழுதப்பட்ட கடிதம், கடந்த ஓகஸ்ட் மாதம் ஆங்கில ஊடகமொன்றினால் பகிரங்கப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்நினைவுத்தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட வேளையிலும், அதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தி அங்கு வாழும் புலம்பெயர் சிங்களவர்களால் கவனயீர்ப்புப்போராட்டமொன்று நடத்தப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட பகிரங்க நேர்காணலின்போது கனடாவில் வாழும் தமிழர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் அண்மையகாலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் தலையீடுகள் தொடர்பில் கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று கற்பனா நாகேந்திரா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் ட்ரூடோ, இக்குறித்த சம்பவம் தனக்கு மேலதிக தகவல்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். இருப்பினும் ஏனைய பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப்போன்று கனேடியவாழ் தமிழர்களும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், எனவே புலம்பெயர் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டார்.