நல்லாட்சியை விட அதிக கடன் பெறும் நிலையில் புதிய அரசாங்கம் : ஜே.வி.பி. யதார்த்தத்தை புரிந்துகொண்டது – ஹர்ஷ

17 0

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அரச நிதி முகாமைத்துவ சட்டத்தை எதிர்த்த ஜே.வி.பி. இன்று அந்த சட்டத்துக்கமையவே செயற்பட்டு வருகிறது. நல்லாட்சி அரசாங்கத்திலேயே அதிகளவான கடன் பெறப்பட்டதாக அன்று குற்றஞ்சுமத்தப்பட்ட போதிலும், அதனை விட அதிகக் கடனைப் பெற வேண்டிய சூழ்நிலைக்கு இன்றைய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக வாரத்துக்கொரு முறை புதிய கடனை பெற வேண்டும் என்ற யதார்த்தத்தை தற்போது ஜே.வி.பி. உணர்ந்திருக்கும் எனக் குறிப்பிட்ட கலாநிதி ஹர்ஷ, வருமானத்தை அதிகரிப்பதற்காக அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதை அவதானித்துக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தொடர்ச்சியாக கடன் பெற்றுக்கொண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பால் இதற்கான காரணிகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியிருக்கிறது. நிதி தொடர்பான அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. அரசியலமைப்பின் 148ஆம் உறுப்புரைக்கமைய பாராளுமன்றத்துக்கே அந்த அதிகாரம் காணப்படுகிறது.

பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரதான மூலம் கோப் குழுவாகும். அதன் முன்னாள் தலைவர் என்ற ரீதியிலேயே இவ்விடயங்களை நான் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அரசாங்கத்துக்கு அன்றாட பணிகளுக்கு நிதி தேவைப்பாடு காணப்படுகிறது. அதனை எங்கிருந்து பெற்றுக்கொள்வது? அதற்கு இரு பிரதான வழிமுறைகள் காணப்படுகின்றன.

அவற்றில் ஒன்று வரி உள்ளிட்ட அரச வருமானத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் திறைசேரி கணக்கில் காணப்படும் நிதியாகும். இரண்டாவது கடன் பெற்றுக்கொள்ளலாகும். திறைசேரியில் மேலதிக அல்லது மிகையான நிதி காணப்படுமானால், கடனை மீள செலுத்துவதற்காக அதனைப் பயன்படுத்த முடியும். மிகை நிதி என்பது அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் செலவுகளைக் கழித்த பின்னர், எஞ்சும் தொகையில் வட்டியையும் குறைத்த பின்னர் மீதப்படும் தொகையாகும்.

மிகை நிதியானது தேசிய உற்பத்தி வருமானத்துக்கு சமாந்தரமாக 2.3 சதவீதமாக பேணப்படும் என்று கடந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியது. எனவே, இந்த மிகை நிதியானது கடந்த ஆண்டும் இவ்வாண்டும் அதிகாரிகளால் முகாமை செய்யப்பட்டு வருகிறது. எனவே, பெற்ற கடனை மீள செலுத்தும்போது அந்த மிகை நிதியில் ஒரு தொகை பயன்படுத்தப்படும்.

இது நீண்ட காணப்படாத இல்லாத ஒன்றாகும். கடுமையான அரச நிதி ஒழுக்கத்தினால் தற்போது மிகை நிதி காணப்படுகிறது. இதற்காக அரச நிதி முகாமைத்துவ சட்டம் கடந்த அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அன்று எதிர்க்கட்சி என்ற ரீதியில் அந்த சட்டத்துக்கு நாம் ஒத்துழைப்பை வழங்கினோம். ஆனால், அன்று அதனை எதிர்த்த ஜே.வி.பி., இன்று அந்த சட்டத்துக்கமையவே மிகை நிதியைப் பேணி வருகிறது.

எவ்வாறிருப்பினும் மிகை நிதி போதவில்லை எனில் வாரத்துக்கொரு முறை கடன் பெற வேண்டியுள்ளது. ஏற்கனவே பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக புதிதாகக் கடன் பெற வேண்டும். அவ்வாறில்லையெனில் பணத்தை அச்சிட வேண்டும். எனினும், நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய மத்திய வங்கியால் பணத்தை அச்சிட முடியாது.

மத்திய வங்கி சுயாதீனப்படுத்தல் சட்டத்துக்கமைய பணத்தை அச்சிட்டு அரசாங்கத்துக்கு வழங்கவும் முடியாது. மத்திய வங்கி சுயாதீனமயப்படுத்தல் சட்டத்துக்கும் அன்று ஜே.வி.பி. ஆதரவளிக்கவில்லை. இந்த சட்டத்தை மாற்றுவதாக அன்று ஜே.வி.பி. கூறினாலும், அவ்வாறு எதனையும் கூறாமல் இவ்வாறு சென்றுகொண்டிருக்கின்றனர். எனவே, மத்திய வங்கியிடம் கடன் பெற முடியாது என்பதால், அரசாங்கம் வர்த்தக சந்தையில் கடன் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்திலேயே அதிகளவான கடன் பெறப்பட்டதாக ஜே.வி.பி. அன்று குற்றஞ்சுமத்தியது. எமது ஆட்சியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த கடனில் 89.9 சதவீதமானவை 2015க்கு முன்னர் பெற்றுக் கொண்ட கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காகவே பெறப்பட்டது. எனினும் அதில் நம்பிக்கை கொள்ளாமல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இவ்வாறு கடன் பெற வேண்டுமா என்று கேட்டனர்.

ஆனால், இன்று என்ன நடக்கிறது? இவ்வாறு தொடர்ச்சியாக சென்றால் கடந்த அரசாங்கத்தை விட 2024இல் தெரிவான அரசாங்கம் அதிகக் கடனைப் பெறும் நிலைமையே காணப்படுகிறது. எமக்கு இவ்வாறு கடன் பெறவேண்டிய தேவையில்லை. கடன் பெறுவதால் என்ன அர்த்தமுள்ளது, கடந்த அரசாங்கம் பாரியளவில் கடன் பெற்றுள்ளது என அரசியல் தளங்களில் கூறினாலும் இதுவே யதார்த்தமாகும்.

அவற்றை  தெரிந்துகொள்ளாமல் கூறினார்களா? அவ்வாறில்லை எனில் மக்களை ஏமாற்றுவதற்காக கூறினார்களா என்பது எமக்குத் தெரியாது. பழைய கடனை மீள செலுத்துவதற்கு வாரத்துக்கொரு முறை புதிய கடனைப் பெற வேண்டும் என்பதே யதார்த்தமாகும். மிகை நிதியை மேலும் அதிகரித்துக்கொண்டால் மாத்திரமே புதிதாகப் பெற்றுக்கொள்ளும் கடன் தொகையையும் குறைத்துக்கொள்ள முடியும்.

மிகை நிதியை பலப்படுத்த வேண்டுமெனில் அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். செலவுகள் குறைக்கப்பட வேண்டும். வருமானத்தை அதிகரிப்பதற்கான பிரதான வழிமுறை வரியைப் பெற்றுக் கொள்வதாகும். வரியைக் குறைப்பதாகக் கூறினாலும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. அது தொடர்பில் எந்தப் பேச்சும் இல்லை. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வரியை அதிகரிப்பதாக முன்னர் கூறப்பட்ட போதிலும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த வரியில் விலக்களிப்பை வழங்கினால் பிரிதொரு வரி அறவிடப்பட வேண்டும். வீடுகளை வாடகைக்கு வழங்குவதன் மூலம் பெற்றுக்கொள்ளும் வருமானத்துக்கு வரியை அறவிடுவதற்கு கடந்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதனை நடைமுறைப்படுத்தாவிட்டால் பிரிதொரு வரியை அறிமுகப்படுத்த வேண்டும். அதே போன்று வட் வரி நீக்கப்பட்டாலும், அதற்கு பதிலாகவும் வேறு வரி அறவிடப்பட வேண்டும். எனவே இந்த அரசாங்கம் கூறிய மாற்றங்களை எவ்வாறு செய்யப் போகிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்றார்.