‘‘கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வெளிநாட்டு தீவிரவாதி. போலி ஆவணங்கள் மூலம் அவர் எப்படியோ கனடா குடியுரிமை பெற்றுள்ளார்’’ என்று எதிர்க்கட்சித் தலைவர் மேக்சிம் பெர்னியர் குற்றம் சாட்டியுள்ளார்.
கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். அத்துடன் கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி, கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் உட்பட 6 அதிகாரிகளை வெளியேற்றினார். இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்ததுடன், இந்தியாவில் இருந்து 6 கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.
இந்நிலையில் கனடாவின் எதிர்க்கட்சியான மக்கள் கட்சி தலைவர் மேக்சிம் பெர்னியர் நேற்று தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடா குடியுரிமை பெற்றவர். அவர் கனடா பிரஜை என்று கூறும் கட்டுக்கதைகளை பகிரங்கப்படுத்த வேண்டிய நேரம் இது. ஏனெனில் காலிஸ்தான் தீவிரவாதிதான் நிஜ்ஜார். அவர் ஒரு வெளிநாட்டு தீவிரவாதி. கடந்த 1997-ம் ஆண்டு முதல் கனடாவில் தஞ்சமடைய கேட்டு பல முறை நிஜ்ஜார் முயற்சித்துள்ளார். எனினும், அவருக்கு கனடா குடியுரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனாலும், எப்படியோ போலி ஆவணங்கள் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு கனடா குடியுரிமை பெற்றுள்ளார். இது கனடா நிர்வாகத்தின் தவறு.
கனடாவில் போலியாக தஞ்சம் அடைந்தவர்கள் நாடு கடத்தப்படுவது போல், நிஜ்ஜாரையும் நாடு கடத்தியிருக்க வேண்டும். நிஜ்ஜார் கனடாகாரர் இல்லை. அவர் இறந்துவிட்டார். இப்போதாவது அவருடைய கனடா குடியுரிமையை ரத்து செய்து, நிர்வாக தவறை சரி செய்யவேண்டும். இதுபோன்ற தவறுகளை இப்போதாவது உணர்ந்து அவற்றை சரி செய்து இந்தியாவுடன் கனடா அரசு இணைந்து செயல்பட வேண்டும். கனடாவில் மற்ற சிக்கல்களை திசை திருப்பவே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் விவகாரத்தை பேசி வருகிறார். நிஜ்ஜார் விவகாரத்தில் உண்மையான ஆதாரங்கள் இருந்தால், அதற்கேற்ப அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பது உண்மையாக இருந்தால், அது மிகப்பெரிய பிரச்சினை. அதை கனடா அரசு சரியான முறையில் கையாள வேண்டும். ஆனால், இதுவரை இந்தியாவுக்கு எதிரான எந்த ஆதாரத்தையும் பிரதமர் ட்ரூடோ சொல்லவில்லை. இது பிரச்சினைகளை திசை திருப்பவே ட்ரூடோ இப்படி பேசுகிறார் என்பதை காட்டுகிறது. இவ்வாறு கனடா எதிர்க்கட்சி தலைவர் மேக்சிம் பெர்னியர் கூறினார்.