“தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கைதான் என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கை தான் என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக மக்களின் எண்ணங்களுக்கு எதிர்மறையான கருத்துகளை ஆளுநர் தெரிவித்து வருகிறார். மற்ற மாநிலங்களில் 3 மொழிகள் இருக்கின்றன என்பது தவறு. இந்தி பேசும் பல மாநிலங்களில் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும். அங்கு ஒரு மொழி கொள்கை தான். ஆங்கில ஆசிரியரும் இல்லை; கற்றுத் தருவதும் கிடையாது. அவர்களுக்கு ஒரு சொற்றொடரை கூட ஆங்கிலத்தில் எழுத, பேசத் தெரியாது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கையை எந்த அரசு வந்தாலும் கடைபிடித்து வருகிறது. அதற்காக இந்தி படிக்கக் கூடாது என்று கூறவில்லை. தனியார் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கின்றனர். விரும்பியவர்கள் இந்தி படிக்க தடையில்லை. தமிழகத்தில் மக்களுடைய எண்ணம்தான் அரசின் கொள்கை” என்று அவர் கூறினார்.