“தமிழர்கள் எண்ணங்களில் 50 ஆண்டாக விஷம்…” – ‘இந்தி மாத’ நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆவேசம்

31 0

“தமிழக மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது,” என்று சென்னையில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். திராவிடக் கட்சிகளின் ஆட்சி மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு விவகாரத்தை முன்வைத்தே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி இன்று (அக்.18) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: “ஆயிரக்கணக்கான பள்ளிகள் மொழி சிறுபான்மையினரால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவ்வாறான பள்ளிகள் அமைந்துள்ள மாநிலங்களில் அம்மாநில அரசுகள், தங்களது மொழிகளை கற்பிக்க அனுமதியளிப்பதில்லை எனக் கூறி அப்பள்ளிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இறுதியில், மொழி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் அவர்களுடைய மொழிகளை கற்பிப்பது, அவர்களுடைய அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.

தமிழக மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது. இத்தகைய எண்ணங்கள், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து நமது மக்களை பிரித்துள்ளது. இந்த நிலத்தின் மிகவும் சக்திவாய்ந்த மொழி சமஸ்கிருதம். தமிழகத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மாபெரும் வள்ளல் பெருமக்களால் உருவாக்கப்பட்டவை. அவர்கள் எவ்வாறு இதுபோன்ற பல்கலைக்கழகங்களை உருவாக்கினார்கள்? அவர்கள் சமஸ்கிருத பல்கலைக்கழகங்களைத் தொடங்கினர், தமிழ்ப் பல்கலைக்கழங்களையும் தொடங்கினர். அப்படித்தான், இந்த பல்கலைக்கழகங்கள் பெரிதும் வளர்ச்சிப் பெற்றன.

ஆனால், இன்று சமஸ்கிருதப் பாடம் முடக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை மற்றும் அழகப்பா பல்கலைக்கழங்களில் சமஸ்கிருதப் பாடம் இல்லை. ஒருகாலத்தில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மிகத் தீவிரமான துறையாக சமஸ்கிருத துறை விளங்கியது. ஆனால், இன்று அது மரித்துபோய்விட்டது. இதுபோன்ற செயல்கள்தான், தமிழகத்தை நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து துண்டித்து, தனிமைப்படுத்தியிருக்கிறது. இது ஒரு பிரிவினைவாத கொள்கை. தமிழகத்தில் வேரூன்றிக் கிடக்கும் இந்த கொள்கைதான், தமிழகத்தை நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து தனிமைப்படுத்தியுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தமிழகத்தைப் பிரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா என்பது எப்போதும் ஒன்றுதான்.எனவே, அது ஒருபோதும் நடக்காது. இந்தியாவின் ஆன்மிக, கலாச்சார தலைநகரம் தமிழகம். சங்க காலம், பக்தி இயக்கம் தொடங்கி ஆழ்வார்களும், நான்மார்களும் மூலம்தான் நாட்டின் பல பகுதிகளுக்கு ஆன்மிகம், கலாச்சாரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. புரட்சிகரமான தனது கவிதைகளால் மகாகவி பாரதியார், சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்டது இந்த மண்ணில் இருந்துதான். இதுதான் நமது பலமே தவிர, பிரிவினைவாத கருத்துகளோ, நச்சுத்தன்மைக் கொண்ட கருத்துகளோ அல்ல.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நமது நாடு கடந்த பத்து ஆண்டுகளில் வேகமாக முன்னேறி வருகிறது. 1947-ல் நாம் சுதந்திரம் பெற்றபோது, இந்தியா உலகின் 6-வது மிகப் பெரிய பொருளாதாரமாக விளங்கியது. அதுவே, 2014-ல் அந்த நிலையில் இருந்து கீழிறிங்கி 11-வது இடத்துக்குச் சென்றுவிட்டது. வறுமை ஒழிப்பு குறித்து நாம் பேசிக் கொண்டிருந்தாலும், நாம் பின்தங்கிய நிலையில் இருந்தோம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், உலகின் 5-வது பொருளாதாராமாக வளர்ச்சிக் கண்டிருக்கிறோம்.

உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இன்று இந்தியா இருந்து வருகிறது. இன்னும் ஒருசில ஆண்டுகளில், உலகில் வேகமாக வளர்ந்து வரும் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை எட்டும். பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் குரலை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், இன்று உலகின் எந்தவொரு முடிவையும், இந்தியா இல்லாமல் எடுக்க முடியாது. இதுதான் இந்தியாவின் பலம். இவ்வாறாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது.

அதேநேரம், சில சக்திகள் இந்தியாவை பலவீனப்படுத்துகின்றன. அவர்கள் இந்தியாவை பின்னுக்கு இழுத்துவர விரும்புகின்றனர். இந்தியாவுக்குள் அவர்கள் வசித்துக் கொண்டே, இந்தியா குறித்து வெளியே தவறாக பேசுகின்றனர். மொழி மற்றும் இனத்தின் பெயரிலும், அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் இருப்பதாகவும் கூறி, அவர்கள் இந்தியாவில் ஒரு நிலையற்றத் தன்மையை உருவாக்க விரும்புகின்றனர்.

தமிழை வெளி உலகுக்கு கொண்டு சென்று பெருமை சேர்த்தது யார்? தமிழகத்துக்கு வெளியே எத்தனை கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது? ஒருவரும் செய்யவில்லை. பிரதமர் மோடிதான் பாரதியார் இருக்கையை உருவாக்கினார். குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிப் பாடம் கற்பிக்கப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, பாஸ்டன் பல்கலைக்கழங்களில் திருவள்ளுவர் இருக்கை உருவாக்கப்பட்டது. ஐ.நா.வுக்கு தமிழ் கொண்டுச் செல்லப்பட்டது.

தமிழ், தமிழ் என்று கூறி இங்கே சத்தமிட்டுக் கொண்டிருப்பவர்கள் யாரும் தமிழுக்காக எதையும் செய்யவில்லை. சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தவர் பிரதமர் மோடி. ஆனால், இங்கிருக்கும் சிலர் வெறுமனே தமிழைப் பற்றி பேசிக் கொண்டும், அதை வைத்து அரசியல் செய்தும் வருகின்றனர். தமிழின் பெயரால் மக்களிடம் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றனர். இதுபோன்றவர்கள், நீண்ட நாட்களுக்கு வெற்றி பெற முடியாது. உலகின் பெருமையான மொழி தமிழ். அதற்காக ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள்தான்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.