அரசியல் கட்சிகள் அம்பாறை மாவட்டத்தை இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்துகின்றது – சந்திரநேரு சந்திரகாந்தன்

35 0

அரசியல் கட்சிகள் அம்பாறை மாவட்டத்தினை ஒரு இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்துவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் எல்லா பக்கத்திலும் அடிவாங்கும் தவில் போன்று தற்போதைய சமகால அரசியல் ரீதியாக பாதிப்படைந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் சமகால அரசியல் போக்கானது மக்கள் கருத்து இல்லாமல் அரசியல் கட்சிகள் தாமாக சிந்தித்து செயற்படுகின்றது.

ஆரம்பத்தில் தேர்தல் கேட்பது என்றால் பிரதேச புத்திஜீவிகள், அதிபர்கள் , இளைஞர்கள், ஆலய அறங்காவலர்கள் என மக்களின் கருத்து கேட்டதன் பின்னரே வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளில் நியமிக்கப்படுவர்.

ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் தேர்தல் கேட்கலாம் என்று புதிய கோட்பாடு அம்பாறை மாவட்டத்தை பெறுத்த மட்டில் உருவாகியுள்ளது.

இதனால் மக்களுக்கு யார் வேட்பாளர் என்றே தெரியாத நிலைப்பாடு காணப்படுகின்றது .

இது அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் தொடர்பில் ஆரோக்யமான செயற்பாடு அல்ல.

தேர்தல் காலத்தில் மாத்திரமே அரசியல் கட்சிகளின் வரவு அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை முன் நிறுத்தி குறித்த வேட்பாளருக்கு களம் அமைத்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

எல்லாரும் வேட்பாளர் ஆகலாம் என்ற கலாச்சாரம் ஒன்று தற்போது உருவாகியுள்ளது பணம் இருப்பவர்கள் எல்லாம் வேட்பாளர்கள் என்ற நிலை அரசியல் ரீதியில் ஆரோக்யமானது அல்ல.

தமிழரசுக் கட்சி, சங்கு , மங்கு என பல கட்சிகள் வந்து கொண்டு கதைக்கும் விடயம் தமிழ் மக்களுக்கு பிரதிநிதி தேவை இவர்களே பிரிந்து காணப்படும் நிலையில் பிரதிநிதித்துவத்தினை எவ்வாறு பாதுகாப்பது ?

அம்பாறை மாவட்ட தமிழர் தொகுதிகள் அரசியல் கட்சிகளுக்கு ஒரு இடைத்தங்கல் முகாம் யாழ், மட்டக்களப்பில் இருந்து வந்து மக்கள் கருத்தை கேட்காமல் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வாக்குகளை சக்கையாக்குகின்றனர்.

வெளி மாவட்டத்தில் இருந்து இங்கு வந்து வாக்கு கேட்கலாம் அம்பாறை தமிழ் மக்களின் வாக்கு தேவை அனால் வேட்பாளர் தொடர்பிலான மக்கள் கருத்தை கேட்கமாட்டார்கள்.

மிக முக்கியமாக அடிமட்டத்தில் இருந்து அரசியல் செய்ய ஆசை இல்லை போனால் நேரடியாக எம்.பி பிரதேச சபை , மாகாணசபை என்று படிப்படியாக செல்லும் போக்கும் தற்போது அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட தொய்வு நிலையினை வைத்து எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் ஆனால் கடந்த காலத்தை சிந்தித்து இம் முறை யாரும் செயற்படவில்லை தன்னிச்சையாக செயற்படுகின்றனர் என்றார்.