திருகோணமலை மாவட்டத்தில் தேர்தல் கால சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் பற்றியும் அவ்விதிமுறைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக முறையிடுதல் பற்றியும் தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று (18) கிண்ணியாவில் நடைபெற்றது.
இந்த செயலமர்வு பிராந்திய ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி மற்றும் சிகிச்சை குழுக்களின் முகவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்காக ‘உங்களுடைய வாக்கு நாட்டின் எதிர்காலமாகும்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
View என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் அனுசரணையுடன் கிண்ணியா சமூகப் பொருளாதார அபிவிருத்தி மன்றத்தினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கலந்துகொண்டு, தேர்தல் கண்காணிப்பு தொடர்பாக பூரண விளக்கமளித்தார்.
நடைபெறவிருக்கும் தேர்தலின்போது கட்சிகள் அரச சொத்துக்களை பயன்படுத்துதல், தேர்தல் சட்டங்களை மீறிய வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக லஞ்சம், ஊழல் மோசடிகளில் ஈடுபடுதல், நீதியான தேர்தல் நடைபெறுவதை தடுத்தல் போன்ற விடயங்களுடன் வாக்காளர்களை தமது தேர்தல் உரிமைகளை பயன்படுத்தி வாக்களிக்கச் செய்தல் பற்றியும் இதன்போது முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கிண்ணியா சமூகப் பொருளாதார அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் எம்.எச்.லபீப், உரிமைகளுக்கான குரல் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ. தர்ஷிகா மற்றும் View நிறுவனத்தின் உத்தியோகத்தர் வடிவேல் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.