அமெரிக்காவில் ஏலம் விடப்பட உள்ள போக சக்தி அம்மன் சிலையை மீட்க வேண்டும்: பொன் மாணிக்கவேல் வலியுறுத்தல்

9 0

அமெரிக்காவில் ஏலம் விடப்படும் நிலையில் உள்ள போக சக்தி அம்மன் சிலையை மீட்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஓய்வுபெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கோவில் தேவராயனபேட்டையில் உள்ள சுகுந்த குந்தளாம்பிகை அம்மன் உடனாய மச்சபுரீஸ்வரர் கோயிலுக்கு நேற்று வந்திருந்த ஓய்வுபெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தக் கோயிலின் இறைவியான போக சக்தி அம்மனின் பஞ்சலோக சிலை 1974-ம் ஆண்டு காணாமல்போனது. தற்போது அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் மேன்ஹாட்டனில் உள்ள ஏலக் கூடத்தில் உள்ள இந்த சிலையை ஏலம் விட முடிவு செய்துள்ளனர். இதை தடுத்து நிறுத்தி, சிலையை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக பிரதமர், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த சிலையை மீட்ட பின்னர், அதை சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்காமல், கோயிலிலேயே வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஜூன் 14-ம் தேதி இந்தகோயிலின் தெற்கு மடவிளாகத்தில் பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 13 சுவாமி சிலைகள்எங்கு உள்ளன என்பதை அதிகாரிகள் கூற மறுக்கிறார்கள். அந்த சிலைகளை மீண்டும் இந்தக் கோயிலிலேயே வழிபாட்டுக்கு வைக்க வேண்டும். இந்த கோயிலில் 13 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் சுற்றுப் பகுதிகளிலும் இந்திய தொல்லியல் துறையினர் முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.

முன்னதாக, இந்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை வழிபாட்டுக்கு வைக்க வேண்டும், இந்த கோயிலை பாதுகாக்கப்பட்ட புராதனக் கோயிலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அங்குள்ள விநாயகர், அம்மனிடம் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து பொன் மாணிக்கவேல் மனுக்களை வைத்து வழிபட்டார்.