செரண்டிப் பி தி சேஞ்ச் அறக்கட்டளையின் “பசியற்ற கல்வி” திட்டம் : யாழில் 10 ஆயிரம் மாணவர்கள் பயனடைவு!

4 0

“பசியற்ற கல்வி” என்ற திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள பத்தாயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக செரண்டிப் பி தி சேஞ்ச் (Serendip Be The Change Foundation) அறக்கட்டளையின் தலைவரும் அமைப்பாளருமான பூங்கோதை சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மானியும்பதி ஹோட்டலில் நேற்று புதன்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், செரண்டிப் பி தி சேஞ்ச் அறக்கட்டளையின் இணை அமைப்பாளரும் பணிப்பாளருமான தருன இந்துஜா, தலைமை நிறைவேற்று அதிகாரி அனுஜன் நவரத்னராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

செரண்டிப் பி தி சேஞ்ச் அறக்கட்டளையானது 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பெரும்பாலான மாணவர்கள் பட்டினியோடு தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், மரக்கறி வகைகளின் விலைகள் உயர்வடைந்ததால் அவற்றைக் கொள்வனவு செய்ய முடியாத மாணவர்கள் வெறும் சோற்றை மாத்திரம் உட்கொண்டனர்.

இந்தப் பாரதூரமான நிலைமையை மாற்றுவதற்காகவும் மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்குவதற்காகவும் செரண்டிப் பி தி சேஞ்ச் அறக்கட்டளையின் மூலம் “பசியற்ற கல்வி” என்ற திட்டம் 2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

“பசியற்ற கல்வி” திட்டமானது விவசாய திணைக்களம் மற்றும் கல்வி திணைக்களம் ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாணவர்கள் பசியற்ற கல்வி கற்க வேண்டும், அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இந்த திட்டத்தின் ஊடாக மாணவர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை தங்களது பாடசாலை தோட்டத்தில் அல்லது வீட்டுத் தோட்டத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் மூலம் மாணவர்களுக்கு தங்களது சொந்த முயற்சியினால் அறுவடை செய்யும் மரக்கறிகளைப் பயன்படுத்தி தங்களது பணத் தேவை மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

முதன் முதலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள 15 அரச பாடசாலைகளைச் சேர்ந்த பத்தாயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

கல்வி திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்க பாடசாலைகளிலேயே இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டது.

இன, மத வேறுபாடின்றி மாணவர்கள் பசியற்ற கல்வி கற்பதும் அவர்களுக்கான ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இத்திட்டத்தின் ஊடாக மாணவர்கள் விவசாயத்துறை தொடர்பிலும் கற்றுக்கொள்கின்றனர்.

இந்த திட்டமானது முழுவதுமாக மாணவர்களின் பங்கேற்புடன் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அறுவடை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் எமது அறக்கட்டளையின் ஊடாக வழங்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தை புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

மேலும், இந்த திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு சென்று செயற்படுத்துவதற்கு நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.

இதன் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு மாணவர்களுக்குப் பசியற்ற கல்வி மற்றும் ஆரோக்கியமான உணவுகளை வழங்க முடியும் என நாம் நம்புகின்றோம்.

நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை தீர்ப்பதற்கு ஒரு சமூகமாக நாம் ஒன்றுபடுவோம்.

செரண்டிப் பி தி சேஞ்ச் அறக்கட்டளையின் “பசியற்ற கல்வி ” என்ற திட்டத்தில் இணைவதற்குப் பங்குதாரர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை அன்புடன் அழைக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.