போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டுக்கு வருகை தந்த இத்தாலியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புதன்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய இத்தாலியப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இத்தாலியப் பிரஜை ஐக்கிய அரபு அமீரக இராச்சியத்திலிருந்து புதன்கிழமை அதிகாலை 04.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், சந்தேக நபர் கொண்டு வந்த கடவுச்சீட்டைச் சோதனையிட்ட போது இந்த கடவுச்சீட்டு சந்தேக நபருக்குச் சொந்தமானது இல்லை என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த கடவுச்சீட்டு தொடர்பான தகவல்கள் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், இந்த கடவுச்சீட்டு வேறொரு நபரிடமிருந்து திருடப்பட்டது அல்லது காணாமல் போனது என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் நாட்டுக்கு வருகை தந்து இங்கிருந்து ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்துள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சார்ஜா நாட்டுக்கு மீண்டும் அனுப்பி வைக்க கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.