தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மேடைகளில் இருந்த ஒருவரை பொலிஸில் உயர் பதவிக்கு நியமித்தமை பொறுத்தமற்றது. அனைவரும் கூறுவதைப் போன்று ஷானி அபேசேகர சிரேஷ்ட அதிகாரி என்றால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு அவர் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மேடைகளில் இருந்த ஷானி அபேசேகரவுக்கு பொலிஸில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளமை பிரச்சினைக்குரியதாகும். இது ஒரு அரசியல் நியமனமாகும். இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவது பொறுத்தமற்றதாகும்.
ஷானி அபேசேகர சிரேஷ்ட அதிகாரி என்ற நிலைப்பாடு அனைவர் மத்தியிலும் காணப்படுகிறது. அதற்கமைய அவர் சிரேஷ்ட அதிகாரி என்பது உண்மையெனில் தந்போது பெற்றுள்ள நியமனம் அரசியல் நியமனம் என்ற போதிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உண்மைகளை வெளிக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுடன் நாமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு அவர் நீதியைப் பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்.
ஐக்கிய மகளிர் சக்தியிலிருந்து ஹிருணிகா பிரேமசந்திர விலகியமைக்கான காரணம் கட்சி சார்பான பிரச்சினைகளால் அல்ல. பாராளுமன்றத் தேர்தலுக்கு அவர் தயாராக வேண்டும் என்பதற்காகவாகும் என்றார்.