தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ்விழா 2024

136 0

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 28 செப்ரெம்பர் 2024 ஆம் நாள் சனிக்கிழமை சொலத்Àண் மாநிலத்தின் BEBARINA மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விருந்தினர்களாக மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் குமரன் சுப்பிரமணியன், இணைப் பேராசிரியர் சீதா லட்சுமி ஆகியோருடன், மத குருமார்களான சிவருசி தர்மலிங்கம் சசிகுமார், அருட்கலாநிதி ஆனந்தநாயகம் யூட்ஸ் முரளிதரன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க தமிழ்ப்பள்ளிகளின் மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் என அரங்கம் நிறைந்த மக்களுடன் பெருவிழாவாக முத்தமிழ்விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளுடன், 2024 ஆம் ஆண்டு தமிழ்மொழியில் ஆண்டு 10 இனை நிறைவுசெய்த 332 மாணவர்கள், ஆண்டு 12 இனை நிறைவுசெய்த 239 மாணவர்கள் ஆகியோருக்கான மதிப்பளிப்பும் தமிழ்க்கல்விப்பணியில் 30, 25, 20, 10 ஆண்டுகள் நிறைவுசெய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றன. 25 ஆண்டுகள் நிறைவு செய்த பள்ளிமுதல்வர்களுக்கு “தமிழ்ச்சுடர்” என்ற சிறப்பும் 25 ஆண்டுகள் நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு “தமிழ்மணி'”என்ற சிறப்பும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்கள்.

நிகழ்வின் சிறப்பாக தமிழ்மொழி, தமிழ்க்கலைகள் பண்பாட்டுக் உயர்கல்விக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழகத்துக்கு இணையான அங்கீகாரங்களைக்கொண்ட உயர்கல்வி அமைப்பான மொழி பண்பாட்டு நிறுவகத்தின் (ILC – Institute of Languages and Culture) உயர்கல்வி தொடக்க விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இதற்குத் ஈழத்திலிருந்து பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம் ஆகியோரும் தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர் குருசாமி அரசேந்திரன் அவர்களும் காணொளி ஊடாக வாழ்த்துரை வழங்கியிருந்தனர். ஐரோப்பிய மொழி மதிப்பீட்டுப் பொதுச்சட்டகத்துக்கமைய (CEFR) தமிழ்மொழியில் ஆண்டு 10, ஆண்டு 12 நிறைவுசெய்த மாணவர்களுக்கு ஆண்டு அடிப்படையில் A1-C2 தரநியமத்துக்கு அமைய ILC இன் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன. மேலும் சிறப்பாக, மொழி பண்பாட்டு நிறுவகத்துக்கும் மலேசியத் தமிழாய்வு நிறுவனத்துக்கும் இடையில் தமிழ்க்கல்வி மேம்பாட்டுக்காக இணைந்து செயற்படுதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையொப்பமிடப்பெற்றது. மொழி பண்பாட்டு நிறுவகம் (ILC) இவ்வாண்டுமுதல் தமிழ்மொழி, தமிழ்க்கலைகள், பண்பாடு ஆகியவற்றில் சான்றிதழ், பட்டயக்கல்வி, இளமாணி ஆகிய கற்கைநெறிகளையும் பட்டப்பின்படிப்புகளையும் ஐரோப்பிய நாடுகளிலும் கனடா போன்ற ஏனைய நாடுகளிலும் வழங்கவுள்ளது.

முத்தமிழ் விழாவின் அனைத்துப் பணிகளிலும் இளையோர் உள்வாங்கப்பெற்று, மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருந்தனர். பெரியவர்கள், இளையவர்கள் என அனைவரதும் ஒருமித்த உழைப்பின் அறுவடையாக சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா 2024 எமது மொழி, கலை, பண்பாடு என்பவை அடுத்த தலைமுறையினரிடம் பக்குவமாகக் கடத்தப்படுகின்ற செய்தியையும், தொடர்ந்தும் ஆண்டு தோறும் இளையவர்கள் இவ்விழாவைச் சிறப்பாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் சுட்டிநின்றது.