ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி சவுக்கு சங்கர் மனு: வழக்குப் பட்டியலை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

13 0

பெண் காவலர்களை தவறாக பேசிய வழக்கில் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்த ஒரே காவல் நிலையத்தி்ல் கையெழுத்திடும் வகையில் ஜாமீன் நிபந்தனையில் தளர்வு கோரி சவுக்கு சக்கர் தாக்கல் செய்த மனுவுக்கு, வழக்குகளின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘சமூக வலைதளத்தில் பெண் காவலர்களுக்கு எதிராக பேசியதாக என் மீது கோவை, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனியில் கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் போலீஸார் என்னை கைது செய்தனர். பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டேன். என் மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

பெண் காவலர்களுக்கு எதிராக நான் பேசிய வழக்குகளின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பல்வேறு வழக்குகளில் எனக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் நேரில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. நான் சென்னையில் வசிப்பதால் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து ஒரே காவல் நிலையத்தில் கையெழுத்திடும் வகையில் ஜாமீன் நிபந்தனையில் தளர்வு வழங்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ”சவுக்கு சங்கர் ஒரே காவல் நிலையத்தில் கையெழுத்திடும் வகையில் நிபந்தனையை தளர்த்தக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ”சவுக்கு சங்கர் மீது எத்தனை வழக்குகள் உள்ளன? எத்தனை வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார்? எந்த காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார் என்பது குறித்த தகவல்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை அக்.21-க்கு ஒத்திவைத்தார்.