வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை அதிகாலை நேரத்தில் கரையை கடக்கும், என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளிலும், சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கான அனுமதி சீட்டையும் மீன்வளத்துறையினர் ரத்து செய்துள்ளனர். மேலும், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
இதனால், இன்று இரண்டாவது நாளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதையடுத்து, தனுஷ்கோடியிலிருந்து, பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், மூக்கையூர் வரையிலுமான மன்னார் வளைகுடா பகுதியிலும், ராமேசுவரம், மண்டபம், தேவிப்பட்டினம், எஸ்.பி.பட்டிணம் வரையிலுமான பாக் நீரிணை கடற்பகுதியிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளும் ஆழம் குறைந்த பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.