யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டினுள் கடந்த 12ஆம் திகதி உட்புகுந்த திருடர்கள் ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை கடந்த திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அந்நபரை நேற்று செவ்வாய்க்கிழமை (15) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை இத்திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.