சந்தர்ப்பவாதிகளையும் மக்கள் சேவகர்களையும் இனங்காணும் நேரம் இது தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என ஈ.பி.டி.பியின் ஊகப் பேச்சாளரும் வேட்பாளருமான சிறீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிடைத்திருக்கும் உரிமைகளையும் இல்லாமல் செய்யும் போக்கிலேயே சக தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் அமைந்து வருகின்றன.
எம்மை பொறுத்தளவில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலைப்பாட்டுக்கமையவே எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இம்முறை ஈ.பி.டி.பி 7 தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய 10 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. அத்துடன் நடைபெறவுள்ள தேர்தல் என்பது தமிழ் மக்களுக்கு மிக முக்கியமானது.
ஏனெனில் எவர் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கின்றார்கள், எவர் மக்களது சேவகர்களாக இருந்து செயற்படுகின்றார்கள், எவர் சுயநலன்களுக்காக செயற்படுகின்றார்கள் என்பதை மக்கள் நிர்ணயிக்கின்ற தேர்தலாக இது இருக்கின்றது. ஏனெனில் மக்கள் தற்போது உண்மையை கண்டுகொண்டுவிட்டனர்.
எமது அரசியல் செயற்பாடுகளையும் நாம் முன்னெடுக்கும் பொறிமுறைகளையும் நாம் வெளிப்படையாகவே கூறுகின்றோம். இதை மக்கள் ஏற்று அணிதிரண்டு எமது சின்னமான வீணைக்கு வாக்களித்து எம்மை அரசியல் பலம் மிக்கவர்களாக்குவாரகள் என நம்புகின்றோம்.
தற்போது மக்கள் எம்மை உன்னிப்பாக அவதானிக்க தொடங்கியுள்ளார்கள். இதனடிப்படையில் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் எமக்கு 7 ஆசனங்களை பெறுவதற்கான ஆணையை தருவார்கள் என நம்புகின்றோம். மக்களது ஆணையே எமது நிலைப்பாடாகவும் உள்ளது என்றார்.