தமிழகத்தில் சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவு திறன் 9,270 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், சூரியசக்தி மின் நிறுவு திறனில் தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. பெரிய நிறுவனங்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்கும், எஞ்சிய மின்சாரத்தை மின்வாரியத்துக்கும் விற்பனை செய்வதற்கு வேண்டி அதிக திறன் கொண்ட சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்கின்றன.இவை தவிர, கட்டிடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த செப்.30-ம் தேதி நிலவரப்படி, மாநிலம் வாரியாக உள்ள சூரியசக்தி மின் நிறுவு திறன் விவரத்தை, மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை வெளியிட்டுள்ளது.
இதில், ராஜஸ்தான் மாநிலம் 24,224 மெகாவாட் சூரியசக்தி மின் நிறுவு திறனுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குஜராத் மாநிலம் 15,120 மெகாவாட் திறனுடன் 2-வது இடத்தையும், தமிழகம் 9,270 மெகாவாட் திறனுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. கர்நாடகா 8,930 மெகாவாட் திறனுடன் 4-வது இடத்தையும், மகாராஷ்டிரா 7,500 மெகாவாட் திறனுடன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த ஜூன் மாத நிலவரப்படி ராஜஸ்தான் முதலிடத்தையும், குஜராத் 2-வது இடத்தையும் பிடித்தன. கர்நாடகா 8,819 மெகாவாட் திறனுடன் 3-வது இடத்திலும், தமிழகம் 8,617 மெகாவாட் திறனுடன் 4-வது இடத்திலும் இருந்தன. இந்நிலையில், கர்நாடகாவை பின்னுக்குத் தள்ளி தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.