பாகிஸ்தானை வீழ்த்தி மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்குள் 2ஆவது அணியாக நுழைந்தது நியூஸிலாந்து

15 0

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (14) இரவு நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை 54 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து 2ஆவது அணியாக மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இக் குழுவிலிருந்து அவுஸ்திரேலியா ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துகொண்டிருந்தது.

இதேவேளை, அரை இறுதி வாய்ப்பை இழந்த இந்தியா முதல் சுற்றுடன் நாடு திரும்புகிறது.

பாகிஸ்தானுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தானின் மோசமான களத்தடுப்பு காரணமாகவே நியூஸிலாந்து 100 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது.

ஜோர்ஜியா ப்ளிமர் (28), சுஸி பேட்ஸ் (17) ஆகிய இருவரும் 39 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரைத் தொடர்ந்து அமேலியா கேர் (9) குறைந்த எண்ணிக்கையுடன் ஆட்டம் இழக்க நியூஸிலாந்தின் ஓட்ட வேகம் சற்று குறைந்தது.

எனினும் அணித் தலைவி சொஃபி டிவைன் (19), ப்றூக் ஹாலிடே (22) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஒரளவு நல்ல நிலையில் இட்டனர். ஆனால், மொத்த எண்ணிக்கை 96 ஓட்டங்களாக இருந்தபோது அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தனர்.

தொடர்நது மெடி க்றீன் (9), இஸபெல்லா கேஸ் (5 ஆ.இ.) ஆகிய இருவரும் மொத்த எண்ணிக்கையை 110 ஓட்டங்களாக உயர்த்தினர்.

பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

111 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 11.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

முனீபா அலி 15 ஓட்டங்களையும் அணித் தலைவி பாத்திமா சானா 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை. நால்வர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.

பந்துவீச்சில் அமேலியா கேர் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஈடன் காசன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஈடன் காசன்

கடைசி லீக் போட்டி

இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டி பி குழுவிலிருந்து எந்த இரண்டு அணிகள் மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும் என்பதைத் தீர்மானிக்கும்.

இக் குழுவில் இங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் 6 புள்ளிகளைப் பெற்று நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன.

மேற்கிந்தியத் தீவுகள் 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது.