இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் ஐந்து தடவைகள் சம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுநராக மஹேல ஜயவர்தன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இண்டியன்ஸ் அவரது நியமனத்தை உத்தியோகபூர்வமாக நேற்று முன்தினம் (12) அறிவித்தது.
மஹேலவை மீண்டும் தமது அணியின் தலைமைப் பயிற்றுநராக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக மும்பை இண்டியன்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
மும்மை இண்டியன்ஸின் உலக தலைமைப் பொறுப்பதிகாரியாக 2022இல் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டார்.
பல்வேறு தொழில்முறை லீக் போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் அணியை விஸ்தரிப்பதை மேற்பார்வை செய்யவே அவருக்கு உலக தலைமைப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.
அவரது மேற்பார்வையில் மும்பை இண்டியன்ஸ் WPL, மும்பை இணடியின்ஸ் நியூயோர்க் (MLC), மும்பை இண்டியன்ஸ் எமிரேட்ஸ் (ILt20) ஆகிய அணிகள் சம்பியன் பட்டங்களை சூடியிருந்தன.
மஹேலவின் இந்த நியமனம் மும்பை இண்டியன்ஸ் குடும்ப அணிகளுக்கு சிறந்த பலனை ஈட்டிக்கொடுக்கும் என நம்பப்படுகிறது.
மும்பை இண்டியன்ஸின் தலைமைப் பயிற்றுநராக இதற்கு முன்னர் 2017இல் இருந்து 2022வரை மஹெல ஜயவர்தன பதவி வகித்திருந்தார்.