சென்னை அருகே முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி

13 0

சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மழை தீவிரமாக பெய்யும் இதன் ஒரு பகுதியாக சென்னை ஒட்டிய கடற்கரை பகுதியான முட்டுக்காடு முகத்துவாரத்தில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.

ஓ.எம்.ஆர். சாலை மற்றும் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள கொண்டங்கி, சிறுதாவூர், தையூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் இருந்து வரும் உபரி நீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக முட்டுக்காக முகத்துவாரம் சென்று அங்கு கடலில் கலக்கிறது. அதிக நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றின் காரணமாக அந்த முகத்துவாரப் பகுதியில் மண் சேர்ந்து விடுவது வழக்கம். ஒவ்வொரு 3 மாத இடைவெளியிலும் இந்த முகத்துவாரப் பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஆகியவை இணைந்து தூர் வாரும் பணியை மேற்கொள்கின்றன. இந்நிலையில் இப்பணியை இன்று (அக்13) மாலை பார்வையிட்ட துணை முதல்வர் மழைக்காலங்களில் வெள்ள நீர் முகத்துவாரப் பகுதியை வந்து சேரும் இடம், கடலில் கலக்கும் இடம், தூர் வாரப்படும் மண்ணை கொட்டி வைக்கும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மழை நீர் கடலில் சென்று சேரும் இடத்தில் இருந்து அகற்றப்படும் மண்ணை அதே பகுதியில் கொட்டி வைக்காமல் உடனடியாக அகற்றி விடுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “வடகிழக்கு பருவமழையின் தொடக்க காலம் மற்றும் வருகிற இரு நாட்கள் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். அதன் ஒரு கட்டமாக முட்டுக்காடு முகத்துவார தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து உள்ளேன். கனமழையின்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மழை நீர் கடலில் கலக்கும் முட்டுக்காடு முகத்துவார பணிகளை ஆய்வு செய்தோம். மழைநீர் தேங்காமல் இருக்க சுமார் ரூ.39 கோடி செலவில் 180 பணிகளை நீர்வளத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால்வாய்களில் 200 கி.மீ. தூரத்திற்கு தூர் வாரும் பணிகளை செய்துள்ளோம். 200க்கும் அதிகமான பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இரவு, பகல் பாராமல் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, நிதித்துறை, மின்சாரத்துறை அமைச்சர்கள், சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் 3 ஆய்வுக் கூட்டங்களை நடத்தி உள்ளோம். முதல்வரின் தலைமையிலும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஓட்டேரி நல்லான் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், அரும்பாக்கம் கால்வாய், ஒக்கியம் மதகு போன்ற நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. ஏரிகளைப் பொருத்தவரை அம்பத்தூர், போரூர், நாராயண புரம், கீழ்க்கட்டளை ஏரிகளின் நீர்வரத்துக்கால்வாய் தூர் வாரப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து 1500க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆகாயத்தாமரைகள், குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு ஆகிய மூன்று ஆறுகளில் உள்ள முகத்துவாரங்களை நிரந்தரமாக திறந்து வைக்கும் வகையில் ரூ.232 கோடி மதிப்பீட்டில் மூன்று தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்கிங்காம் கால்வாய் முகத்துவாரப்பணியும் முட்டுக்காட்டில் வேகமாக நடைபெற்று வருகிறது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் எந்தவித ஆபத்தும் வரக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த அரசும் முதல்வரும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்” இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இந்த ஆய்வின்போது குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துணை முதல்வரின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் டாக்டர். தாரேஷ் அகமது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ், செங்கல்பட்டு சார் ஆட்சியர் வெ. நாராயணசர்மா ஆகியோர் உடன் இருந்தனர்.