பெயர்கள் என்ன என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதில்லை!

11 0

ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஜனநாயகக் கட்சியாகும். அனைவரும் ஒருமித்து தான் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும். அந்த சந்தர்ப்பங்களில் நபர்கள் யார், அவர்களது பெயர்கள் என்ன என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் தமிதா அபேரத்ன விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கட்சியை வெற்றி பெறச் செய்வதே எமது பிரதான நோக்கமாகும். கடந்த தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டு இலட்சத்து 50 000க்கும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியை அண்மித்தோம். அந்த வகையில் இம்முறை அதனை விட அதிக வாக்குகளைப் பெற்று இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் 8 உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவே நாம் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். கட்சி என்ற ரீதியில் தீர்மானங்களை எடுக்கும் போது, அது கட்சியின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையும். அவ்வாறான தீர்மானங்களே இதுவரையில் எடுக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும் போது நபர்கள், அவர்களது பெயர்கள் தொடர்பில் தேடிப் பார்ப்பதில்லை.

கட்சி சார்பில் தேசிய ரீதியில் யார் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாலும் அதற்கு வாழ்த்து தெரிவிப்பது எமது கடமையாகும். அவ்வாறு வாழ்த்து தெரிவிப்பதும், இந்த மாவட்டத்தின் வெற்றிக்காக செயற்படுவதும் வேறுவேறாகும். மாவட்ட மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவே நான் இதற்கு முன்னர் தீர்மானங்களை எடுத்திருக்கின்றேன். அவை மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவையாகும்.

எனவே இங்கு யாருடையதும் பெயர் முக்கியமானதல்ல. மக்களே முக்கியத்துவமுடையவர்கள். அந்த வகையில் மிகச் சிறந்த வேட்பாளர்களையே நாம் களமிறக்கியிருக்கின்றோம். எமது கட்சி ஜனநாயக கட்சியாகும். எனவே அனைவரும் ஒருமித்து தான் தீர்மானங்களையும் எடுத்திருக்கின்றோம். அந்த தீர்மானங்களின் அடிப்படையில் செயற்படும் போது சில சந்தர்ப்பங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதில் நாம் பின்வாங்குவதில்லை என்றார்.