கோடரி சின்னத்தில் களமிறங்கும் 14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு!

16 0

களுத்துறை மாவட்ட வரலாற்றில் முதன் முறையாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு ஒன்று  ‘கோடரி’ சின்னத்தில் போட்டியிட  வேட்புமனுத்  தாக்கல் செய்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் இருந்து இம் முறை 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பண்டாரகம, ஹொரணை, புலத்சிங்கள, அகலவத்தை மத்துகம, பாணந்துறை, பேருவளை மற்றும் களுத்துறை உட்பட 8 தேர்தல் தொகுதிகளில் இருந்து  நாடாளுமன்றத்திற்குத்  தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அந்தவகையில் செல்வராஜ் விஜேபாண்டியன், குப்புசாமி ஆரோக்கியன், சுந்தரலிங்கம் சிவன் பிள்ளை, கிருஷ்னசாமி சிவகுமார், ராமையா ஸ்ரீ காந்த, நடேஷன் சிவபாலன், நடேசன் உதயகுமார், சிதம்பரம், தேவேந்திர சுப்பிரமணியம் ரமேஷ், சந்திரஜோதி வினோதா,  முத்து திரிச்செல்வம், சின்னசாமி சுப்ராயன், விஜேகுமார் மோனிஷா, சுமதி சுப்ரமணியம் ஆகியோர் மேற்படி  சுயேச்சை குழுவில் இம் முறை தேர்தல் களத்தில் போட்டியிடவுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1024,244 ஆகும். இதில் சுமார் நாற்பதாயிரம் அல்லது நாற்பத்து ஐந்தாயிரம் தமிழ் வாக்காளர்கள் இம் முறை பொது தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்கும் பட்சத்தில் விகிதாச்சார அடிப்படையில் தமிழ் உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு உள்வாங்க கூடிய சாத்திய கூறுகள் காணப்படுவதாக குழு தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.