தரமில்லா உணவுக்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்: பொதுமக்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும்

16 0

தரமில்லா உணவுகளுக்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம் எனவும், புகாரளிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும் என்பதால் பயப்படத் தேவையில்லை என்றும் உணவுபாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

உணவகங்கள், சாலையோர கடைகள், தங்கும் விடுதிகள் எனபல்வேறு இடங்களில் சாப்பிடும் உணவு தரமற்றதாக இருந்தால் அந்த உணவகத்தின் ஊழியரிடம் சண்டை போட்டு ஆறுதலடைந்து விடுகிறோமே தவிர உணவு பாதுகாப்பு துறைக்கு தெரியப்படுத்த தவறிவிடுகிறோம். இதற்கு சரியான விழிப்புணர்வு இல்லாததே காரணம். மேலும் தங்களது விவரங்கள் வெளியே தெரிந்துவிட்டால் பிரச்சினையாகிவிடுமோ என்றும் சிலர் பயப்படுகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு, உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளிக்கவும், அதேநேரம் புகார்தாரரின் விவரங்களை பாதுகாக்க ஏதுவாகவும், பிரத்யேகமாக செல்போன் எண் செயல்பாட்டில் உள்ளது.

பொதுமக்கள் தாங்கள் சாப்பிடக்கூடிய உணவகங்களில் கெட்டுப்போன, தரமற்ற உணவுகள் இருப்பதை அறிந்தால், 9444042322 என்றஎண்ணுக்கு உடனடியாக வாட்ஸ் அப் மூலம் புகார் அனுப்பலாம். வாட்ஸ் அப்பில் கெட்டுப்போன உணவு குறித்த தகவல்களை புகைப்படங்களாக, வீடியோ பதிவுகளாக, குறுஞ்செய்தியாக கூட டைப் செய்து அனுப்பி வைக்கலாம். புகார்கள் தலைமை கட்டுப்பாட்டுமையத்தில் பதிவுசெய்யப்படும்.

பின்னர் புகாரின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு தகவல்கள் பகிரப்படும். ஆனால் புகார்தாரரின் செல்போன் எண் மற்றும் விவரங்கள் அனுப்பப்படாது. எனவே புகார் அளிக்கும் பொதுமக்கள், தங்களது விவரங்கள் வெளியே வந்துவிடுமோ என்றுபயப்பட வேண்டியதில்லை. புகார்பெறப்பட்ட அடுத்த 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன் விவரங்கள் தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் பதிவுசெய்யப்பட்ட பின்னர், புகார்தாரரின் எண்ணுக்கும் அனுப்பப்படும். புகார்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் சிறிது தாமதம் ஆகலாமே தவிர 72 மணி நேரத்துக்குள் புகாருக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பதிவேற்றப்படும். அதேபோல ‘புட் சேப்டி கனெக்ட்’ என்ற செயலி மூலமாகவும், unavupukar@gmail.com மூலமாகவும் பொதுமக்கள் புகார்களை அனுப்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.