யுத்தத்தை தீவிரப்படுத்தி, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றியவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரே

23 0

தமிழர்களுக்கு எதிராக தமது உறுப்பினர்களை உள்நுழைய வைத்து யுத்தத்தை தீவிரப்படுத்தியதோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றியவர்களும் மக்கள் விடுதலை முன்னணியினரே. இவர்களின் காலத்தில் அரசியல் தீர்வுக்கும் வழியில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (12) வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல் எனும் தலைப்பிலான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51/1 இலக்க தீர்மானத்தினை ஏற்க மாட்டோம் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான இடைக்கால அரசு தீர்மானித்து.  ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும் அதனை அறிவித்துள்ளது. இது வியப்புக்குரிய விடயமல்ல.

ஆனால், தெற்கின் மாற்றத்துக்கான அரசியலோடு நாமும் இணைவோம் எனக் கூறி தேசிய மக்கள் சக்தியின் கட்சி சின்னத்தில் வட கிழக்கில் வாக்கு கேட்பவர்களும் மாற்றம் எனும் முகத்தோடு சுயேட்சையாக வாக்கு கேட்பவர்களும், தமிழர்களின் வாக்குகளால் வென்ற பின்னர் அரசுக்கு முண்டு கொடுப்போம் என சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் தங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு கேட்கின்றோம்.

இல்லையேல், முள்ளிவாய்க்கால் இரண்டுக்கு வழிவகுத்த தமிழினத் துரோகிகளாக வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள் என்பதையும் கூற விரும்புகின்றோம்.

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சூழ்நிலையை தேசிய மக்கள் சக்தியினர் பயன்படுத்தி சிங்கள பௌத்த பேரினவாதிகளும் அவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ள படைத்தரப்பினரும் வடகிழக்கின் வாக்குகள் இன்றி எங்களை வெல்ல வையுங்கள் என்று நேரடியாக கூறுவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3/2 பெரும்பான்மை ஆசனங்களை குறிவைத்து தேசிய மக்கள் சக்தி கவர்ச்சி அரசியலை செய்துவரும் சூழ்நிலையே ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்துக்கு பதில் அளித்துள்ளதன் மூலம் தமிழர் விரோதப் போக்கை வெளிப்படையாகவே கையில் எடுத்துள்ளதோடு, தமது அரசுக்கு பேரினவாத கருத்தியல் கொண்டவர்களும் அவர்களினால் கட்டமைக்கப்பட்ட படையினரும் தமக்கு பாதுகாப்புக் கவசமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அரசியல் யாப்பில் கொடுக்கப்பட்டுள்ள பௌத்தத்துக்கான முன்னுரிமையை நாம் பாதுகாப்போம் என ஏற்கனவே தேசிய மக்கள் சக்தியினர் கூறியுள்ளதோடு இடைக்கால அரசாங்கம் அமைத்ததும் பௌத்த தலைமைகளை தேடி தேடிச் சென்று உங்கள் கட்டுக்குள் இருப்போம் என்பதன் அடையாளமாக தங்கள் கைகளில் பிரித்து நூலை கட்டிக்கொள்வதோடு அவர்கள் காலில் விழுந்து ஆசியும் பெற்றுக்கொள்கின்றனர். இங்கு பக்திக்கு அப்பால் அரசியலே மேலோங்கியுள்ளது எனலாம்.

கடந்த 1971 மற்றும் 1988 /89 காலப்பகுதியில் தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி அரசுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தின்போது முன்னணியினரின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் சித்திரவதைக்குள்ளாகி கொல்லப்பட்டனர். சமூக புதைக்குழிக்குள் தள்ளப்பட்டனர். இதனை செய்த படையினரை அடையாளம் காட்டி நீதி கேட்க இன்று வரையுமா துணியவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அரசியலுக்காக ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் (இவரை 20 வருட சிறைக்குள் தள்ளிய மகிந்த சர்வதேச அழுத்தத்தின் காரணமாக விடுதலை செய்தது பழைய கதை) அவர்கள் தயாரித்த அறிக்கையை ஐ.நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கொண்டு சென்று நீதி கேட்ட காலமும் உண்டு. ஆனால், மக்கள் விடுதலை முன்னணி அவர்களின் உறுப்பினர்களாக கருதப்பட்டவர்களின் சமூக புதைகுழி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்டபோதும் அதற்கான விசாரணையை தொடர்வதற்கு முன்வரவில்லை. இதுவே இவர்களின் அரசியல்.

அத்தகைய படை கட்டமைப்புக்குள் தமிழர்களுக்கு எதிராக தமது உறுப்பினர்களை உள்நுழைய வைத்து யுத்தத்தை தீவிரப்படுத்தியதோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றியவர்களும் மக்கள் விடுதலை முன்னணியினரே. இவர்கள் சர்வதேச விசாரணையை எந்த வகையிலும் அனுமதிக்காததோடு உள்நாட்டு விசாரணை என தமிழர்களின் கண்களிலும் சர்வதேசத்தின் கண்களிலும் மண்ணைத் தூவுவதற்கே முயற்சிக்கின்றனர். இவர்களின் காலத்தில் அரசியல் தீர்வுக்கும் வழியில்லை.

தற்போதைய ஆட்சியாளர் காலத்தில் தமிழர் தேச மக்களாக அரசு பயங்கரவாதத்தின் உச்சத்தை அனுபவிப்போம் என்பது மட்டும் உண்மை. இதற்கு முகங்கொடுக்க ஜனநாயக வடிவில் 2009க்கு முன்னரான நிலையில் தேசமாக அரசியல் எழுச்சி கொள்ளல் வேண்டும். தற்போதைய நிலையில் தேர்தல் அரசியல் அதற்கு முழுமையாக உதவப்போவதும் இல்லை.

காரணம், தமிழர் தேசத்தை அழிக்கும் தமிழ் தேச புல்லுருவிகள் தேசம் என்றும் படர்ந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளிகளும் தேசமெங்கும் பலமாக முகாம் அமைத்துமுள்ளனர்.

சுயேட்சை முகத்தோடும், தமிழர் தேசிய கவசத்தோடும் தேர்தல் களத்தில் முகமூடியோடு நிற்கின்றனர். வாக்காளர்களை கவர்ந்து பேசி அதிகார நாற்காலிகளை தமதாக்குவதே இவர்களது நோக்கம். இவர்களை அடையாளம் காண்போம்.

தேர்தல் அரசியலுக்கு அப்பால் பலமான மக்கள் அரசியலை முன்னெடுக்கவேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். அரசியல் யாப்பின் பாதுகாப்போடு கட்டமைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த பேரினவாதம் முள்ளிவாய்க்கால் 2க்குள் எமைத் தள்ளி பூகோல அரசியலுக்குள் எம் அரசியலை கரைத்துவிடும் அபாயமும் உள்ளது.

இந்தியா அரசியல் சுயநலம் மிக்கது. இனி என்றுமே எமக்கு உணவுப் பொட்டலத்தை வானத்திலிருந்து போடாது என்பதை மனதில் இருத்தி, சுயநல அரசியலுக்கு அப்பால் பயணிக்க வழிவகுப்போம் என்றார்.