பாராளுமன்றத் தேர்தலிலிருந்து விலகிக்கொள்கிறேன் – மாவை சேனாதிராசா

14 0

இலங்கை தமிழ் அரசு கட்சியில் சிலரின் தன்னிச்சையான முடிவுகளை நான் ஏற்கவில்லை. அதனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்க தீர்மானித்து, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலிருந்து விலகி இருக்கிறேன் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்று தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் அரசு கூட்டணியினர் நேற்றைய தினம் (11) மாவை சேனாதிராசாவை சந்தித்து கலந்துரையாடினர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தெரிவின்போது எம்மால் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர்களை புறந்தள்ளி தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வேட்பாளர்களை நியமித்துள்ளனர். அதனை நான் ஏற்கவில்லை. அதனால் இம்முறை தேர்தலில் இருந்து விலகியிருக்கிறேன். ஆனாலும் நான் தமிழ் அரசு கட்சியில் இருந்து விலகவில்லை.

தமிழ் அரசு கட்சியில் வேட்பாளர் பட்டியலில் நிராகரிக்கப்பட்டவர்கள் வேறு கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.

நாங்கள் ஒன்றுபட்டு இன விடுதலைக்காக போராட வேண்டியவர்கள். இவ்வாறு பிளவுபட்டு நிற்பது துயரமே.

எனவே, இந்த தேர்தலின் பின்னராவது மனஸ்தாபங்களை விட்டு அனைவரும் இன விடுதலைக்காக ஒன்றுபட வேண்டும் என்றார்.