திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த நிலையில் பத்திரமாக தரையிரக்கப்பட்டது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 144 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மாலை 5.40 மணியளவில் புறப்பட்டது. வழக்கமாக விமானம் தரையிலிருந்து மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அந்த விமானத்தை மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் காரணமாக அந்த விமானம் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்தது. விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து விட்டு பிறகு விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், சக்கரங்களை இயக்கவும் முயற்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்களும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தன. விமானத்தில் உள்ள பயணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக தவித்து வந்தனர். சுமார் 2 மணிநேரம் 35 நிமிடமாக வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், 8.15 மணியளவில் விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 6 குழந்தைகள் உள்பட 144 பயணிகளும் பத்திரமாக விமானத்திலிருந்து மீட்கப்பட்டனர்.