நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர்.
அங்குலானை பொலிஸ் பிரிவில் சயூருபுர அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று இரவு (11) இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்தவர் லுணாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
அங்குலானை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான நபரே தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமண நிகழ்வின் போது அதிக சத்தத்துடன் டி.ஜே இசைக்கப்பட்ட போது அதனை குறைக்குமாறு உயிரிழந்த நபர், கூறிய போதே வாக்குவாதம் ஏற்பட்டு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அங்குலானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தஹமான பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக நபரொருவர் தனது மருமகனை பொல்லினால் தாக்கி கொலை செய்துள்ளார்.
நேற்று (11) இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலில் அதே பகுதியை சேர்ந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்தார்.
குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்த நபர், தனது மனைவியை தாக்க முற்பட்ட போது மனைவியின் தந்தை அதனை தடுக்க முயற்சி செய்துள்ளார்.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாமனார், மருமகனை பொல்லினால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.