தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு இலக்கிய நோபல் பரிசு!

29 0

 2024-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று அதிர்ச்சியை எதிர்கொள்ளும், மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் தீவிரக் கவிதைக்கான உரைநடை பாணியை அங்கீகரிக்கும்விதமாக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பு மிக்க பரிசு தெற்காசிய இலக்கியத்தின் மீது ஒரு வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.

தென்கொரியாவில் உள்ள குவாங்ஞ்ஜுவில் கடந்த 1970-ம் ஆண்டு பிறந்தவர் ஹான் காங். இவர் தனது சக்தி வாய்ந்த மற்றும் எழுச்சி மிக்க எழுத்துகளுக்காக உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார். இவரது எழுத்துகள் தனிமனித மற்றும் கூட்டு அதிர்ச்சிக்கு இடையிலான சிக்கல்களின் இடைவினைகளை ஆராய்கிறது. அத்துடன், அவற்றை வரலாற்றில் இருந்து வரைகிறது. மேலும், தனிமனிதன் மற்றும் சமூகத்தில் அதன் தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. மனித துன்பத்தின் உடல் மற்றும் மன வெளிப்பாடுகளை தனது எழுத்தில் கலக்கும் இவரது தனித்துவத்தை நோபல் கமிட்டி சுட்டிக்காட்டியுள்ளது. வலியின் இந்த இரட்டை வெளிப்பாடு அவரின் படைப்புகளின் கருப்பொருளாக இருக்கிறது. அடிக்கடி அவை கீழைதேசத்தின் தத்துவார்த்த மரபுகளி்ல் இருந்து எழுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

53 வயதான ஹான் காங், கடந்த 2007-ம் ஆண்டு தனது வெஜிட்டேரியன் நாவலுக்காக மான் புக்கர் சர்வதேச விருதை பெற்றார். கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 18-வது முறையாக பெண் எழுத்தாளர் ஒருவர் இந்தப் பரிசைப் பெற்றுள்ளார். இலக்கிய நோபல் பரிசு பெறும் முதல் தென்கொரியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.