“புத்தகங்கள் படிப்பதால் சைபர் குற்றங்கள் குறைகிறது” – உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா

16 0

“புத்தகங்கள் படிப்பதால் சைபர் குற்றங்கள் குறைகிறது” என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் 11-வது புத்தகத் திருவிழா இன்று மாலை தொடங்கியது.

திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் துவங்கிய புத்தக்திருவிழா துவக்க நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகைதீன் வரவேற்றார். திண்டுக்கல் இலக்கிய களம் தலைவர் ரெ.மனோகரன் முன்னிலை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா புத்தக திருவிழா அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார். புத்தக விற்பனையை கடல்சார் வாரிய துணைத்தலைவர் மா.வள்ளலார் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., அ.பிரதீப் முதல் விற்பனை நூலை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா கூறியதாவது, “புத்தக திருவிழா நடத்துவதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன், நற்சிந்தனைகள் வளர்கிறது. அரசியலை கடந்து, சித்தாந்தத்தை கடந்து, ஜாதி, மத உணர்வுகளை கடந்து தமிழர்களாக ஒன்றிணைந்து நடத்தப்படும் புத்தக திருவிழா வரவேற்கத்தக்கது. புத்தகங்கள் படிப்பதால் சைபர் குற்றங்கள் குறைகிறது. இதுபோன்ற புத்தக திருவிழாக்கள் அதிகம் நடத்த வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.