தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் ஒக்டோபர் 10ஐ முன்னிட்டு டென்மார்க்
மகளிர் அமைப்பினரால் விடுக்கப்படும் அறிக்கை.
தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது மண் விடுதலையை மட்டும் குறியீடு செய்வதல்ல. அது காலங்காலமாக எமது மண்ணில் ஆழவேரூன்றிய மூடக்கொள்கைகளையும், சமுதாயச்சிறைகளையும் தகர்த்து முற்போக்கான கொள்கைகளை வரித்து, அறிவார்ந்த சமுதாயம் ஒன்றை உருவாக்கும் உயரிய நோக்கம் கொண்டது. இதன் வெளிப்பாடாகத் தோற்றம் பெற்றதே தமிழீழப்பெண்களின் எழுச்சி.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலிலே உருவாகி எமது மண்ணிலே அரும்பணி புரிந்து மாபெரும் தற்கொடையையும் புரிந்து சென்ற போராளிகளிலே முதல் பெண்போராளியாக வீரகாவியம் படைத்த இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்கள் வீரச்சாவைத் தனதாக்கிக் கொண்ட நாளையே நாம் தமிழீழப்பெண்கள் எழுச்சி நாளாகக் கொள்கிறோம்.
நீண்ட கால ஆக்கிரமிப்புக்கும், கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து, அனைத்து துறைகளிலும் தம்மை வளர்த்து, தமிழ்த் தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.
போரியலில், அரசியலில், நிர்வாகங்களில், கட்டுமானங்களில் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நட்சத்திரங்களாக மிளிர்ந்தனர். பெண்களின் இந்த எழுச்சி குமுகாயத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது, பெண்கள் தனித்துவமாகச் செயற்பட்டனர். பணி முடிந்து எந்த நேரத்திலும் அச்சமின்றி வீடு திரும்பினர். பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பு என்பது மே 2009 இற்கு முன்பு உயர்நிலையில் இருந்தது.
ஆனால் இன்று அங்கே வாழும் பெண்கள் தமக்கு நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள். இன்று ஒரு பெண் பிள்ளை தெருவில் தனியாக நடந்து செல்ல முடியாத ஒரு நிலை தமிழீழத்தில் உருவாகியுள்ளது. இதனால் பெற்றோர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருடைய மனங்களிலும் எங்களைக் கட்டி காத்து, பாதுகாப்பு தந்தவர்கள், எப்பொழுது திரும்பி வருவார்கள் என்ற ஏக்கம் இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக 2009 மே மாதம் 18 வரை முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய 21 ஆம் நூற்றாண்டின் மிகக் கொடிய மனித படுகொலை வரை பெண்களே நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போரில் பல பெண்கள் சிறிலங்கா இராணுவத்தின் சித்திரவதைகளின் பின் படுகொலை செய்யப்பட்ட ஆதாரங்கள் பல வெளியாகி இருக்கின்றன. இதைவிட 2009 மே போரின் போது சிறிலங்கா இராணுவத்திடம் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்ட பெண்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியவில்லை.
இன்றும் பெண்கள், சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி நிற்கிறது. இளையவர்களை இலக்கு வைத்த குமுகாய சீர்கேடுகள், போதைப்பொருள் பாவனை என்பன முன்னெப்போதும் இல்லாதவகையில் உச்சம் பெற்றிருக்கின்றன.
தமது உரிமைக்கான குரலை இழந்து, பலவீனப்பட்டு நிற்கும் எமது தாயகப் பெண் குலத்தின் விடுதலைக்காக, அவர்களது சுதந்திரம் மிக்க சுபீட்சமான எதிர்காலத்திற்காக உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும். 2009 ம் ஆண்டு மே மாதத்துடன் எமது மக்கள் சுவாசித்த சுதந்திரக்காற்று முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. அந்த சுதந்திரக்காற்றை எமது மக்கள் மீண்டும் சுவாசிக்க வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் அயராது உழைக்க வேண்டும்.
நன்றி
மகளிர் அமைப்பு டென்மார்க்
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”