கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்கு வழங்குக

20 0

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (10) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதற்கமைய ஐந்து ஏக்கரை விட குறைவான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளதுடன், அதற்கென ஒழுங்கான பொறிமுறைமையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(10) பிற்பகல் சந்தித்த போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க, காணி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஹேமசிறி லியனகே மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.