இலங்கைத் தமிழரசுக்கட்சி வன்னித்தேர்தல் தொகுதிக்குரிய வேட்புமனுக்கள் ஒக்ரோபர்.10 இன்று வவுனியா மாவட்டச்செயலகத்தில் பிற்பகல் 03.00மணியளவில் தாக்கல்செய்யப்பட்டது.
அந்தவகையில் வவுனியா மாவட்ட தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் பிற்பகல் 01.00 மணிதொடக்கம் – 01.30 மணிவரையான சுபநேரத்தில் வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் கையொப்பமிட்டனர்.
அதனையடுத்து வேட்பாளர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்திலிரு நடைபவனியாக மாவட்ட செயலகத்தையடைந்து அங்கு வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல்தொகுதியில் இலங்கைத் தமிழரசுக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முல்லைத்தீவு நிர்வாக மாவட்டம் சார்பில் மூவரும், வவுனியா நிர்வாக மாவட்டம் சார்பாக நால்வரும், மன்னார் நிர்வாக மாவட்டம்சார்பாக இருவரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமது வேட்புமனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.
அந்தவகையில் முல்லைத்தீவு நிர்வாகமாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண பிரதிஅவைத் தலைவர் வல்லிபுரம் கமலேஸ்வரன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ந.ரவீந்திரகுமாரன் ஆகியோரும், வவுனியாமாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம், தேவசகாயம் சிவாநந்தராசா, பாலசுப்பிரமணியம் கலைதேவன், காந்திநாதன் திருமகன் ஆகியோரும், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சட்டத்தரணி செல்வராஜ் டினேசன், சட்டத்துறை மாணவி அந்தோனி டலீமாஹலிஸ்ரா ஆகியோரும் இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்கட்சிசார்பாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தமது வேட்பு மனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.