இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹி இன்று வியாழக்கிழமை (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தான் ஜனாதிபதி அஸீப் அலி சர்தாரியின் விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் “இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருங்கிய உறவை நான் பெரிதும் பாராட்டுகிறேன். ஜனநாயகம், பன்மைத்துவம், சட்டத்தின் ஆட்சி, பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் எமது ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன். இது நம் இரு நாடுகளுக்கும் நல்ல நிகழ்வுகளை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று பாகிஸ்தான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆகியோர் கலந்துரையாடியதுடன், பாதுகாப்புத் துறையில் பாகிஸ்தானின் ஆதரவு இலங்கைக்கு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.
கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. தற்போது, மருத்துவக் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவதுடன், எதிர்காலத்தில் விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான வாய்ப்புகள் வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கிராமிய வறுமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையின் கால்நடைத் துறையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வலுவான உறவு இந்தச் சந்திப்பில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் அந்த உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.